Ads Area

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே மிதவாத அரசியலுக்கு எதிராக வெளிப்படையான வெறுப்பு நிலவியது. இவ்வெறுப்பு முடிவில் ஒரு புதியப் போக்காகத் தோற்றம் பெற்று அது தீவிர தேசியவாதப் போக்கெனக் குறிப்பிடப்பட்டது. 

 

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

 

 

இத்தீவிர தேசியவாதிகள் அல்லது முற்போக்காளர்கள் அல்லது போர்க்குணமிக்கவர்கள் என நாம் அழைக்க விரும்பும் இக்குழுவினர் மிதவாத தேசியவாதிகளின் கவனமான அணுகுமுறை, ஆங்கிலேயரிடம் மன்றாடுதல், மனுச் சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் இறைஞ்சுதல் கொள்கைகளை" கடுமையாக விமர்சித்தனர். 

 

மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா லஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது. இத்தகையப் போக்கு வளர்ச்சி பெற்றதற்கான அடிப்படைக் காரணங்கள் : 

 

1.காங்கிரசுக்குள் உருவான உட்குழுக்கள்,

 

2.மிதவாத தேசியவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு

 

3.வங்காளத்தைப் பிரித்ததற்காக கர்சன் மீது ஏற்பட்ட கோபம்.

 

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையாகும். அது காலனிய எதிர்ப்பு, சுதேசி, தேசியம் வளர்வதற்கு வினையூக்கியாய் அமைந்தது. 

 

பிரிவினைத் திட்டம் முதன்முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது. 

 

ஆனால் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் சுதேசி இயக்கத்திற்கான பல உத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்விநிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன. 

 

இவ்வியக்கமே (1905-1911) காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும். 

 

ஏனெனில் இவ்வியக்கத்தின் போக்கில் இந்திய தேசிய இயக்கத்தின் இயல்பில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டன. அது முன்வைத்த நோக்கங்கள், போராட்ட வழிமுறைகள், அதன் சமூக ஆதரவுத் தளம் ஆகியன மாற்றம் பெற்றன.

 

ஆங்கில அரசாட்சியின் கீழ் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் எதிர்கொண்ட பிரச்சனைகள், அவர்களனைவருடைய வாழ்வின் பொது அம்சமாகிவிட்ட காலனியச் சுரண்டல் ஆகியவை வெளிக் கொணரப்பட்டதால் இயக்கத்தின் சமூக ஆதரவுத்தளம் விரிவடைந்தது. 

 

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றில் முதன் முதலாக பெண்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும், விளிம்பு நிலை மக்களும், நவீன தேசியச் சிந்தனைகளையும் அரசியலையும் அறிந்து கொண்டனர். இக்காலப்பகுதியில்தான் முதன் முதலாக உயர்குடியினர் முழுமுயற்சி மேற்கொண்டு சாமானிய மக்களிடம் பேசி அவர்களையும் அரசியலில் இணைந்து கொள்ள அழைத்தனர். 

 

மேலும் இந்தியாவின் பலபகுதிகளில் வட்டார மொழிப் பத்திரிகைகள் பெற்ற வளர்ச்சி சுதேசி இயக்கத்தின் முக்கியச் சாதனையாகும். இக்கால கட்டத்தில் வட்டார மொழிப் பத்திரிகைகளின் தேசியத்தன்மை மிகத் தெளிவாகவே புலப்பட்டது. 

 

தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி, வங்காளத்தில் யுகந்தர் ஆகிய பத்திரிக்கைகளின் பங்களிப்பு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.

 

சுதேசி இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப்பெற்ற நிலையில், தேசிய இயக்க நடவடிக்கைகளை, அவை எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் (1908), இந்தியப்பத்திரிகைச் சட்டம் (1910) எனபல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது. 

 

பொதுக்கூட்டங்களைக் கண்காணிப்பதும், பதிவு செய்வதும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். (பேச்சுகளைப் பதிவு செய்வதற்காக முதன்முறையாக காவல் துறையினர் சுருக்கெழுத்து முறையைப் பயன்படுத்தினர்)


Bottom Post Ad

Ads Area