Ads Area

வங்கப் பிரிவினை | Partition of Bengal | 1905

வங்கப் பிரிவினை

 

1899 ஜனவரி 6 இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாகவும் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்டப் பஞ்சங்கள், பிளேக் நோய் ஆகியவை ஏற்படுத்தியத் தாக்கத்தின் விளைவாய் ஆங்கிலேயரின் செல்வாக்கு மேன்மேலும் குறைந்து கொண்டிருந்த காலமது. 

 

வங்காளத்தில் சுதேசி இயக்கம் (1905 -1911)

 

 

கற்றறிந்த இந்திய மக்கள் பிரிவினரின் கருத்துக்களை மாற்றுவதற்கு கர்சன் சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டார். கற்றறிந்த தேசியவாத அறிஞர்களோடு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு மாறாக அவர் வரிசையாகப் பல அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

 

எடுத்துக்காட்டாக கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899). 1904இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது. 

 

இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது. இறுதியாக வங்காளத்தைப் பிரிக்க 1905இல் ஆணை பிறப்பித்தார். இப்பிரிவினை இந்தியா முழுவதும் பரவலான எதிர்ப்புக்கு இட்டுச் சென்று இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி வைத்தது.

 

ஒரு நிர்வாகப் பிரிவு எனும் பொருளில் வங்காள மாகாணம் உண்மையிலேயே மேலாண்மை செய்ய இயலாத வகையில் வடிவத்தில் பெரிதாக இருந்தது. பிரிக்கப்பட வேண்டியதின் அவசியம் தொடர்பாக 1860ஆம் ஆண்டு முதலாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. மார்ச் 1890இல் பிரிவினைக்கானத் திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. 

 

கர்சன் அசாம் சென்றிருந்த போது ஐரோப்பியப் பெரும் பண்ணையார்கள் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். கல்கத்தாவிற்கு அருகே தங்களுக்கு ஒரு கடல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் அசாம் - பெங்கால் இருப்புப்பாதையைச் சார்ந்திருப்பதை ஓரளவு தவிர்த்துக் கொள்ள முடியும் என வேண்டினர். 

 

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1903இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புக்களில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார். அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்களை முன்வைத்தது. 

 

அவை: வங்காளத்திற்கு சுமை குறைவு, அசாமின் முன்னேற்றம் ஆகியனவாகும். எப்படியிருந்தபோதிலும் இத்திட்டம் எவ்வாறு ஆங்கிலேய அதிகாரிகளின், ஐரோப்பிய வணிகர்களின் வசதிக்கேற்றவாறு உண்மையிலே தீட்டப்பட்டது என்பது பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டன.

 

தொடக்கத்தில் வங்காளத்தின் சில பகுதிகளை மாற்றுவது அல்லது ஏனைய பகுதிகளை மாற்றியமைப்பது என்றிருந்த எண்ணம் டிசம்பர் 1903 முதல் 1905க்குள் பிரிவினைக்கான முழுத்திட்டமாக மாற்றப்பட்டது. வங்காளம் இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். புதிய கிழக்கு வங்காளமும் அசாமும் சிட்டகாங், டாக்கா , திப்பேராவிலுள்ள ராஜஷாகி மலையின் சில பகுதிகள், அசாம் மாகாணம் மற்றும் மால்டா ஆகியவற்றை உள்ளடக்கியதாய் இருக்கும்.

 

இந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் நோக்கம்

 

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வங்காளத்தில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளை அடக்கி இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது என்பதே கர்சனுடைய நோக்கமாகும். குடிமைப் பணியாளர்கள் முன்வைத்த மாற்றுத் திட்டங்களைக் குறிப்பாக, வங்காளத்தை மொழி அடிப்படையில் பிரிப்பது எனும் கருத்து வேண்டுமென்றே புறந்தள்ளப்பட்டது. 

 

இத்திட்டம் வங்காள அரசியல்வாதிகளை மேன்மேலும் ஒருங்கிணைத்துவிடும் என்பதால் கர்சன் இத்திட்டத்தை ஏற்க மறுத்தார். கர்சன் பிடிவாதமாக , பிரிக்கப்பட்ட வங்காளம் தெளிவாகத் தனித்தனியாய் பிரிக்கப்பட்ட இந்து - முஸ்லிம் மக்களைக் கொண்டிருக்க வேண்டுமென விரும்பினார். 

 

புவியியல் அடிப்படையில் பாகீரதி ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது. தனக்கு முன்னர் பணியாற்றியவர்களைப் போலவே கர்சனும் இதனை அறிந்திருந்தார். கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். 

 

மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சம அளவில் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெறும் உள்நோக்கத்தோடு அவர்களை நயந்து செல்லும் போக்கை ஆங்கில நிர்வாகம் கடைபிடித்தது. முந்தைய முஸ்லிம் ஆட்சி முதலாக முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என பிப்ரவரி 1904இல் டாக்காவில் கர்சன், முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.

 

வங்கப் பிரிவினை வங்காள மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றுபடுத்தியது. இனம், வர்க்கம், சமயம், வட்டாரம் ஆகியத் தடைகளைத் தாண்டி மக்களிடையே வளர்ந்து கொண்டிருந்த வங்காளிகள் எனும் அடையாளத்தை ஆங்கில நிர்வாகம் ஒருவேளை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகத்தின் பெரும்பகுதியினரிடையே வங்காள ஒற்றுமை எனும் வலுவான எண்ணம் வளர்ந்து விட்டது. ரவீந்திரநாத்தாகூரை மையமாகக் கொண்டு வங்க மொழி இலக்கிய மதிப்பைப் பெற்றுவிட்டது. 

 

வட்டாரமொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி ஒற்றுமை தொடர்பான கதை வடிவிலான விவரிப்புகளைக் கட்டமைப்பதில் பங்காற்றியது. இதைப்போலவே மீண்டும் மீண்டும் தோன்றிய பஞ்சங்கள், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சறுக்கல் ஆகியவை காலனிய எதிர்ப்பு உணர்வுகளைத் தோற்றுவித்தன.

 

பிரிவினை எதிர்ப்பு இயக்கம்

 

டிசம்பர் 1903 இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில் இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அதை விமர்சனம் செய்தனர். ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி, K. K. மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின் எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது. 

 

பிரிவினைக்கு எதிராக இங்கிலாந்து மக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது எனும் அளவில் அதன் நோக்கமும் கட்டுக்குள்ளேயே இருந்தது. எப்படியிருந்தபோதிலும், பரவலான எதிர்ப்புகளுக்கிடையே 1905 ஜூலை 19 இல் வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி, பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம் ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிய எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர். 

 

அவைகளுள் ஒன்றுதான் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாத தேசியத் தலைமை இதனை ஏற்றுக் கொண்டது. முதன்முறையாக மிதவாத தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த அரசியல் முறைகளை மீறினர். 

 

1905 ஜூலை 17 இல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் பானர்ஜி அறைகூவல் விடுத்தார். 

 

ஆகஸ்டு 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.

 

இருந்தபோதிலும் சுதேசி இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலானது வங்கப்பிரிவினையை ரத்து செய்யப் போதுமான அளவிற்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மிதவாத தேசியவாதிகள், இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி முழு அளவிலான அமைதி வழியில் எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முற்றிலும் எதிராக இருந்தனர். 

 

ஆனால் தீவிர தேசியவாதிகள் இவ்வியக்கம் ஏனைய மாகாணங்களுக்கு விரிவுப்படுத்தப்படவும் முழு அளவிலான வெகுஜன இயக்கத்தைத் துவங்குவதற்கும் ஆதரவாக இருந்தனர்.

 

 

இயக்கத்தின் பரவல்

 

 

தலைவர்களின் திட்டமிடப்பட்ட முயற்சிகளுக்கும் மேலாக வங்கப்பிரிவினைக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பிரிவினைக்கு எதிரானப் போராட்டத்தில் மாணவர்களின் பங்கேற்பு அதிகம். 

 

இதன் எதிர்வினையாக ஆங்கில அதிகாரிகள் நேரடி நடவடிக்கை நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மானியங்களும் நிறுத்தப்படும் எனப் பயமுறுத்தினர். இதற்கு எதிர்வினையாக தேசிய கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. 

 

வங்காளம் முழுமையிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் ஆயிரக்கணக்கில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. மத விழாக்களான துர்காபூஜை போன்றவற்றை புறக்கணிப்புப் பற்றிய வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலைப் பாடிக்கொண்டு வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

 

 

 

Bottom Post Ad

Ads Area