எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , » சமண சமயம் - மகாவீரர் - இந்திய வரலாறு - TNPSC

சமண சமயம் - மகாவீரர் - இந்திய வரலாறு - TNPSC


அறிவு மலர்ச்சிக்காலம்:

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் என்னவென்றால் அது அறிவு மலர்ச்சி காலம். இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கியது அக்காலம்.வரலாற்று அறிஞர் வில் டூராண்ட் அக்காலத்தை நட்சத்திரங்களின் மழை என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்.

அக்காலத்தில் அறிவு மலர்ந்தது என்பதற்கு  சான்றுகளாக அங்கங்கள், சமண நூல்கள், திரிபீடகங்கள் மற்றும் ஜாதகங்கள், பௌத்த நூல்கள் சாட்சிகளாக இருக்கின்றன.அக்காலமே சமணம் மற்றும் புத்தம் தோன்றிய காலங்கள் ஆகும்.

அறிவு வளர்ச்சிக்கும் சமணம், பவுத்தம் ஆகியவை தோன்றியதற்கான காரணங்கள் என்ன?

பின் வேதகாலத்தில் சடங்கு முறைகளும் வேள்விகளும் இருந்தன. 

வேள்விகளுக்கான செலவு அதிகமாக இருந்தது.  

மூடநம்பிக்கைகளும் நடைமுறைகளும் சாதாரண மக்களை குழப்பமடையச் செய்தன. வேள்விச் சடங்குகளுக்கு மாற்றாக கற்பிக்கப்பட்ட உபநிடத தத்துவங்களை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை

வேள்விக்கு மாற்றாக உபநிடதங்கள் தோன்றின. ஆனால் மக்களுக்கு புரியும் வகையில் எளிதாக இல்லை. ஆனால் புத்தர் மற்றும் மகாவீரரின் போதனைகள் எளிமையாக இருந்தன.  

புரோகித வர்க்கத்தின் ஆதிக்கத்தை சத்திரியர்கள் வெறுத்தனர்.  (புத்தர் மற்றும் மகாவீரரும் சத்ரிய வம்சத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது)

சமண சமயம் : 

சமண சமயம் இந்தியாவின் வடக்கு பகுதியில் பரவி இருந்தது. 

சமண சமயத்தை தோற்றுவித்தவர் மகாவீரர் ஆவார்.  இவரது காலம் கிமு 539 - 467 ஆகும். 

சமணம் என்ற சொல் ஜினா என்ற சமஸ்கிருத சொல்லிருந்து வந்தது.  சமண சமயத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள்  ஆவர்.  

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் என்கிற ஆதிநாதர் ஆவார்.  

தீர்த்தங்கரர் என்ற சொல்லுக்கு பிறவிப் பெருங்கடல் கடந்த ஞானி என்று பொருளாகும்.  ரிசப தேவரின் சின்னம் காளை ஆகும்.  

இரண்டாவது தீர்த்தங்கரர் அஜீத்நாதர் ஆவார்.  

22-வது  தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆவார்.   

23 வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்  ஆவார்.  இவரது சின்னம் பாம்பு ஆகும்.

24 வது தீர்த்தங்கரர் மகாவீரர்  ஆவார்.  கடைசி தீர்த்தங்கரரும் இவரேயாவார். மகாவீரரின் சின்னம் சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  

மகாவீரர்:

மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர் ஆகும்.  வர்த்தமானர்  என்ற சொல் செழிப்பு என்ற பொருளைத் தருகிறது. இவர் பிறந்த இடம் பீகார் மாநிலம், வைசாலிக்கு அருகில் உள்ள குந்த கிராமம் ஆகும்.  இவரது தந்தை சித்தார்த்தர் மற்றும் தாய் திரிசலா.  இவரது தந்தை ஞானத்ரிகா இனக்குழுவின் தலைவர் இவரது தாய் லிச்சாவி நாட்டு அரசி ஆவர். மகாவீரரது குலம் சத்திரிய குலமாகும்.   இவரது மனைவியின் பெயர் யசோதா.  இவரது மகள் பெயர் அனோஜா என்கிற பிரியதர்ஷனா.   

இவர் துறவறம் மேற்கொண்ட போது வயது 30 ஆகும்.  மகாவீரர் 12 ஆண்டுகள் தவம் செய்தார். அவர் தனது 42-வது வயதில் ரிஜிபாலிகா ஆற்றங்கரையில் சால் மரத்தடியில் ஞானம் பெற்றார்.   இவர் பெற்ற ஞானத்தின் பெயர் கைவல்யம் என்பதாகும் . கைவல்யம் என்றால் உணர்ந்த ஞானம் என்பது பொருளாகும்.  மகாவீரர் என்ற சொல்லுக்கு சிறந்த வீரர் எனவும்,  ஜீனர் என்ற சொல்லுக்கு ஆன்மாவை வென்றவர் எனவும் பொருளாகும்.  தன்னுடைய 72 ஆவது வயதில் ராஜகிரகத்திற்கு அருகில் உள்ள பவபுரி அல்லது பவா எனும் இடத்தில் மரணமடைந்தார்.  

மகாவீரரின் போதனைகள் :

மகாவீரரின் போதனைகள் திரிரத்தினங்கள் எனப்படும்.  

அவை, 
1. நல்ல நம்பிக்கை 
 (சம்யோக் தர்ஷனா) 
2. நல்ல அறிவு(சம்யோக் ஞானா)  
3.நல்ல நடத்தை( சம்யோக் மஹாவ்ரதா) 

சமண சமயத்தின் கொள்கைகள் பஞ்சமஹாத்ரதா எனப்படும்.  

1. அஹிம்சை 
2.சத்தியம் 
3.அஸ்தேயம் (திருடாமை)
4.தியாகம் (அபரிகிரக)
5. பிரம்மச்சரியம்.

சமணத்தின் தனித்தன்மை வாய்ந்த போதனைகள் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது. 

அகிம்சை அல்லது அறவழியே சமணத்தின் அடிப்படைத் தத்துவம்.

முக்தி அடைவது அல்லது பிறப்பு இறப்பு, மறுபிறப்பு எனும் சுழற்சியில் இருந்து விடுபடுவதே சமயத்தின் இறுதி லட்சியம்.

இறுதி தீர்ப்பு என்பதை சமணம் மறுக்கிறது. 

(யார் சொர்க்கத்திற்கு செல்வது? யார் நரகத்துக்கு செல்வது? என்பதை கடவுள் தீர்மானிப்பார் என்கிற ஒரு நம்பிக்கை. இதுவே இறுதி தீர்ப்பு) 

ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்ம வினையால் தீர்மானிக்கப் படுகிறது என்பதை சமணம் ஆதரிக்கிறது.

கர்மா என்றால் என்ன? இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்க்கையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை.

சமண சமயத்தைப் பற்றி கூறும் படைப்புகள் :

யாப்பெருங்கலங்காரிகை, யாப்பெருங்களவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது, நிகண்டுகள் என்பவை ஆகும். 

சமண சமயத்தின் பிரிவுகள் இரண்டு வகைப்படும் :

1. திகம்பரர்கள் :  இதன் தலைவர் பத்திரபாகு ஆவார்.  இவர்கள் திசையையே ஆடையாக அணிந்தவர்கள்.  

2.ஸ்வேதம்பரர்கள் : இதன் தலைவர்  ஸ்தூலபாகு ஆவார்.  இவர்கள் வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள்.  

சமண சமயத்தின் புனித நூல்கள் அங்கங்கள்,  பூர்வங்கள் என பிரிக்கப்பட்டது.  நிகாத நதபுத்தா என்பது மகாவீரரின் படைப்பு ஆகும் . 

மாநாடுகள் : 

முதல் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் பாடலிபுத்திரம் ஆகும்.  இதற்கு தலைமை வகித்தவர் ஸ்தூலபாகு ஆவார்.  

இரண்டாவது சமண சமய மாநாடு குஜராத் மாநிலத்திலுள்ள வல்லபி என்ற இடத்தில் நடைபெற்றது.  இதற்கு தலைமை தாங்கியவர் தேவரதி என்பவர்  ஆவார்.  இரண்டாவது சமண சமய மாநாட்டில்  12 அங்கங்களைக் கொண்ட சமண இலக்கியத்தின் இறுதி வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  


சமணர்களின் முக்கியத் தொழில் வணிகம் ஆகும். சமண சமயத்தின் கொள்கைகள் பிராகிருத மொழியில் பரப்பப்பட்டது.  சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவர், கலிங்கத்துகாரவேலன், பிம்பிசாரர், அஜாதசத்ரு,  சந்திரகுப்த மௌரியர், கூன்பாண்டியன், இராசபுத்திரர்கள் மற்றும் கடம்பர்கள்  ஆவார்கள்.  சமண சமய இலக்கியத்தின் பொற்காலம் களப்பிரர்களின் காலம் ஆகும்.  

கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை :

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோவில், கஜுராஹோ, சித்தூர், ரங்பூர் ஆகிய இடங்களில் உள்ள சமண கோவில்கள் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.  

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சரவணபெலகோலா என்னும் இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் ஆலயம், உதயகிரி, ஹிதிகும்பா, கழுகுமலையில் உள்ள சிற்பங்களும் சமண சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. 

தமிழ்நாட்டில்  மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் சமண சங்கம் நிறுவப்பட்டது. இவர் பூஜ்யபாதா என்பவரின் சீடர் ஆவார்.  காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பதிக்குன்றம் கோவில் ஜைனகாஞ்சிகோவில் எனப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்ன வாசலில் உள்ள சமணர்களின் குகைக்கோயில்கள் உள்ளன.

மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர்மலை உள்ளது.  இது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக உள்ளது.   

மதுரை அரிட்டாபட்டியில் கலிஞ்சமலை உள்ளது.  சமணர்களுக்கான கற்படுக்கை பாண்டவர் படுக்கை எனப்படுகிறது.  அறவோர் பள்ளி என்பது சமணத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலை நூல் கூறுகிறது. 

கவுந்தியடிகள் என்கிற சமணத் துறவியைப் பற்றி சிலப்பதிகாரம் நூல் கூறுகிறது.  கோவலன் கண்ணகி மதுரை செல்லும் வழியில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கவுந்தியடிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

வேளாண்மை செய்வதுகூட பாவமென்றார் மகாவீரர். கிமு நான்காம் நூற்றாண்டின் இறுதியில் கங்கை சமவெளியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.  பத்திரபாகு மற்றும் சந்திரகுப்த மௌரியர் தலைமையில் கர்நாடகாவில் சரவணபெலகோவாவை பல சமண துறவிகள் அடைந்தனர்.  இதற்கு ஸ்தூலபாகு தலைமை ஏற்றார்.  இவர் துறவிகளுக்கான விதிகளை மாற்றி அமைத்தார்.  இதனால் சமண சமயம் இரண்டாகப் பிளவுற்றது.  

சமண சமயம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template