Ads Area

தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்

தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்

 

தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்


(அ) 1857 குறித்த ஓயாத நினைவுகள்

 

1857 இன் பேரெழுச்சியே இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாளாகும். புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் ஆங்கில ராணுவம் செய்த அட்டூழியங்கள் “பழி தீர்க்கப்படாமலே” இருந்தன. ராணுவச் சட்டங்களும் நடைமுறைகளும்கூடப் பின்பற்றப்படவில்லை. 

 

ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரிகள் தங்கள் கைதிகள் குற்றம் புரிந்தவர்களோ அல்லது ஒன்றுமறியாதவர்களோ எப்படியிருப்பினும் அவர்களைத் தூக்கிலிடப் போவது உறுதி எனக் கூறினர். இவ்வாறான பாகுபாடற்ற பழிச்செயலுக்கு எதிராக யாரேனும் குரலை உயர்த்தினால் அதிகாரியின் உடன் பணியாற்றுபவர்கள் கோபத்துடன் அவர்களை அடக்கினர். 

 

கேலிக்கூத்தான இவ்விசாரணைகளுக்குப் பின்னர் மரண தண்டனை அளிக்கப்பட்டோர் அது நிறைவேற்றப்படும் வரை அதிகாரிகளுக்கு தெரிந்த வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டனர். 

 

1857 ஜூன் - செப்டம்பர் மாதங்களில் ஆங்கிலப் படைகளால் டெல்லி முற்றுகையிடப்பட்டது குறித்து, பம்பாய் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டன், அப்போதைய இந்தியாவின் எதிர்கால அரசப்பிரதிநிதி (1864) சர்ஜான் லாரன்ஸுக்கு எழுதியதை இங்கே பதிவு செய்வது பொருத்தமுடையதாகும். “நண்பன்” பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழி வாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சிவிட்டோம்".

 

(ஆ) இனப்பாகுபாடு 

 

ஆங்கிலேயர் இனப்பாகுபாட்டுக் கொள்கையைப்பின்பற்றினர். அரசு உயர்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர். இதன் விளைவாக இந்திய உயர் வகுப்பாரிடையே ஏற்பட்ட வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிராக இந்தியர்கள் புரட்சி செய்ய இட்டுச் சென்றது. 

 

குடிமைப் பணிக்கானத் தேர்வுகள் அறிமுகமானபோது வயது வரம்பு இருபத்தொன்று என நிர்ணயம் செய்யப்பட்டது. அத்தேர்வுகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அத்தேர்வுகளை இந்தியர்கள் எழுதவிடாமல் தடுப்பதற்காக வயது வரம்பு பத்தொன்பதாகக் குறைக்கப்பட்டது. இதைப்போலவே குடிமைப்பணித் தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்த வேண்டுமென இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 

(இ) இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் நடவடிக்கைகள்

 

அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டமும், பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் (1878) எதிர்ப்புகளைத் தூண்டின. 

 

இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது. 

 

ரிப்பன் அரசப்பிரதிநிதியாக இருந்தபோது இல்பர்ட் மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர். ஆனால் ஐரோப்பியர் எதிர்ப்பால் ஐரோப்பியரின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

 

(ஈ) பத்திரிகைகளின் பங்கு

 

இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும். அது தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு உதவியது. பத்திரிக்கைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின. 

 

ராஜா ராம்மோகன் ராயின் வங்க மொழிப்பத்திரிகையான சம்வத் கௌமுதி (1821) பாரசீக மொழிப் பத்திரிக்கையான மிராத்-உல்-அக்பர் ஆகியவை மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொது விஷயங்களை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் முற்போக்காக பங்காற்றின. 

 

பின்னர், மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக எண்ணற்ற தேசிய, பிராந்திய மொழிப் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. தேசிய உணர்வைப் பேணுவதில் அவை மிகப்பெருந் தொண்டாற்றின. அவைகளுள் அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே கிரானிக்கல், தி ட்ரிப்யூன், தி இண்டியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியமானவையாகும்.

 

(உ) இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல்

 

வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ் முல்லர் போன்ற கீழையுலக அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அராபிய, பாரசீக, சமஸ்கிருத மொழிகளிலிருந்த மத, வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர். இந்தியாவின் மரபு, புலமை ஆகியவற்றின் செழுமையால் கவரப்பட்டப் பல தொடக்ககால தேசியவாதிகள் இந்தியாவின் பண்டையப் பெருமையை மீட்டெடுக்க ஆர்வத்துடன் வேண்டினர். 

 

தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும். மேலும் உலகைத் தடுமாறச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் இந்திய நிலைப்பாட்டில் தீர்த்து வைப்பதாகும் என அரவிந்தகோஷ் எழுதினார்.

Bottom Post Ad

Ads Area