Ads Area

சுதேசமித்திரன் | தென்னிந்தியாவின் முதல் நாளிதழ்

சுதேசமித்திரன்

தென்னிந்தியாவின் முதல் நாளிதழ்

 

1891-ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் நாளிதழே தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேராளா,  இன்றைய தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மதராசு மாகாணம் என அழைக்கப்பட்ட அக்காலத்தில் அங்கு அதிக விற்பனையைக் கொண்ட தமிழ் நாளிதழாக சுதேசமித்திரன் திகழ்ந்தது. தமிழர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பர்மா (மியான்மர்), இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், மலாய் மாநில கூட்டாட்சி, சுமத்திரா, போர்னியோ, கொச்சின் இராச்சியம், சீனா மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா என விற்பனை விரிந்திருந்தது.

 

நாளிதழின் உள்ளடக்கம்

 

https://www.vendrukaattu.com/2025/03/swadesamitrannewspaper.html

 

சுதேசமித்திரன், காந்தி மற்றும் காங்கிரஸ் ஆதரவு இதழாக இருந்தது. காந்தி, தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்திய அறப்போர், தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த இந்தியர் போராட்டங்கள் போன்றவற்றைத் தமிழர்கள் அறியச் செய்தது. நேட்டால் , டிரான்ஸ்வால் , கேப்காலனி , ஆரஞ்சுரிவர் ஸ்டேட்ஸ் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் சுதேசமித்திரனுக்கு நிருபர்கள் இருந்தனர். காந்தியைப் பற்றி, தமிழில் முதன் முதலாகச் செய்தி வெளியிட்ட இதழாக, சுதேசமித்திரன் கருதப்படுகிறது. 

 

சிறுகதை, நாவல் தொடர், கட்டுரை, பாடல்கள், துணுக்குகள், உலகச் செய்திகள், சுதேசிச் செய்திகள், சுதேச வர்த்தமானம், இந்திய வர்த்தமானம், பிரபஞ்ச வர்த்தமானங்கள், இசை விமர்சனங்கள், நூல் மதிப்புரை எனப் பலவற்றிற்கு இடமளித்தது சுதேசமித்திரன். படங்களுடன் கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. விளம்பரங்களும், பஞ்சாங்கக் குறிப்புகளும் இடம் பெற்றன. சமாசாரக் குறிப்பு , சமாசாரக் கடிதம், தலையங்கங்கள் இதழ் தோறும் இடம் பெற்றன. 

 

விவசாயப் பகுதி, ஆடை ஆபரணங்கள் பகுதி, பொருட்களின் விலையைக் கூறும் பகுதி, உலக வர்த்தமானங்கள் என மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் இதழ்தோறும் வெளிவந்து வாசகர்களைக் கவர்ந்தன. சிறுவர்களுக்கான பகுதிக்கும் இடமளித்தது மித்திரன்.

 

பாரதியாரும் சுதேசமித்திரனும்

 

தமிழகத்தின் மகாகவி பாரதியார் தனது 22-ஆம் வயதில் 1904-ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணிய அய்யருடன் எழுந்த வேறுபாட்டால் 1906-இல் விலகினார். பாரதி விலகிய பின்னர்ப் பஞ்சாபில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து சுப்பிரமணிய அய்யர் அரசின் அநீதிகளை எதிர்த்த கட்டுரைகளை வெளியிட்டார். இதனால் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

1915-இல் த இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அய்யங்காரிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். அவரின் தலைமையில் நாளிதழ் புதுப்பொலிவு பெற்றது. சி. ஆர். சீனிவாசனை வணிக மேலாளராகவும் பாரதியாரை 1920-இல் மீண்டும் கொணர்ந்து ஆசிரியராகவும் அரசியல் தளத்தில் ஒரு சிறப்பு இலக்கிய நாளிதழாக மாற்றினார்.1962-இல் சீனிவாசனின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்தி போன்றவற்றுடன் போட்டியிட முடியாது 1970களில் மூடப்பட்டது.

 

பிரபல எழுத்தாளர்களும் சுதேசமித்ரனும்

 

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சுதேசமித்திரனின் பங்கு சிறப்பானது. அனுபவமிக்க க. நா. சுப்பிரமணியம், மு.வரதராசனார் மற்றும் எஸ். டி. எஸ். யோகி என்று பலரின் ஆக்கங்களை ஏந்தி வந்திருக்கிறது. கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929-இல் ஆரம்பித்தது. 

 

இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம், க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

 

மதிப்பீடு

 

தமிழின் முன்னோடி நாளிதழ் மற்றும் வார இதழாகவும், வெகு ஜன மக்களிடையே வாசிப்பார்வத்தை ஏற்படுத்திய முதன்மை இதழாகவும் சுதேசமித்திரன் மதிப்பிடப்படுகிறது.

 

மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் இதழ் சுதேசமித்திரன். தமிழில் வெளியான முதல் நாளிதழாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தேசியம் சார்ந்து பல செய்திகளை வெளியிட்டதுடன், நாட்டுப்பற்று, மொழிப்பற்று வளரவும் காரணமாக இருந்தது. 

 

சுதேசமித்திரனில் வெளியான கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றில் சில தொகுக்கப்பட்டு சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு’ என்ற தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியுள்ளன. வல்லிக்கண்ணனும், ப. முத்துக்குமாரசாமியும் இணைந்து இதனைத் தொகுத்துள்ளனர்.

Bottom Post Ad

Ads Area