இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 3 (12 லிருந்து 35 வரையுள்ள சரத்துகள்) அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகிறது. அடிப்படை உரிமைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது . முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை பெற்றிருந்தது. ஆனால் தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளது. 1978 ஆம் ஆண்டு 44 ஆவது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது. சொத்துரிமை சரத்து 31 இல் இருந்து நீக்கப்பட்டு பகுதி 12 சரத்து 300a-இல் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 அடிப்படை உரிமைகள் "இந்தியாவின் மகா சாசனம்" என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது. ஆனால் இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன. 1948-இல் ஐநா மனித உரிமைகள் பிரகடனம் உருவானது. சரத்து 32 இன்படி உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்றும் சரத்து 226-இன் படி உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்றும் கூறப்படுகிறது. 24 ஆவது சட்டத்திருத்தம் 1971 இன் படி பாராளுமன்றம் அடிப்படை உரிமைகள் உட்பட அரசியலமைப்பின் எந்த ஒரு பகுதியையும் திருத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
அடிப்படை உரிமைகள் : சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை ,சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, அரசியல் அமைப்பின்படி தீர்வு காணும் உரிமை
சமத்துவ உரிமை
சரத்து 14 : சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்(சரத்து 361 இன் படி).
சரத்து 15 : சாதி, மதம், இனம், பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்தல்
சரத்து 16 : பொது வேலைவாய்ப்புகளில் சம உரிமை
சரத்து 17 : தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை ஒழிப்பு சட்டம் 1955-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இது 1976 ஆம் ஆண்டு சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்டது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இல் இயற்றப்பட்டது.
சரத்து 18 : அரசு அனுமதியின்றி பெரும் இராணுவ மற்றும் கல்வி தவிர்த்த பதவி மற்றும் பட்டங்களை தடை செய்வது. ராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல். பாரதரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற அரசால் வழங்கப்படும் விருதுகள் இவ்விதிப்படி வழங்கப்படுகிறது.
சுதந்திர உரிமை (சரத்து 19 - 22)
சரத்து 19 : குடிமக்களுக்கு பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமை மற்றும் தொழில் செய்யும் உரிமை போன்ற ஆறுவகையான சுதந்திர உரிமைகளை வழங்குகிறது.
சரத்து 20 : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை.
சரத்து 21 : வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை. 359 இன்படி தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் குடியரசுத்தலைவர் சரத்து 20 மற்றும் 21 தவிர எந்த அடிப்படை உரிமையையும் நிறுத்தி வைக்கலாம் என கூறப்படுகிறது.
சரத்து 21 a : தொடக்கக் கல்வி பெறும் உரிமை. 86 ஆவது சட்டத்திருத்தம் 2002 இன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும்.கல்வி உரிமை பாதுகாப்பு சட்டம் 2009 இல் உருவாக்கப்பட்டது.
சரத்து 22 : சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக்காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு உரிமை. கைது செய்யப்பட்ட நபருக்கு கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்க வேண்டும், கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
சரத்து 23 : கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தை தடுப்பது
சரத்து 24 : தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல். 1986 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட்டது மற்றும் 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
சமய சுதந்திர உரிமை
சரத்து 25 : ஒருவருக்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும் அதை பரப்பவும் உரிமை வழங்கப்படுகிறது.
சரத்து 26 : மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை
சரத்து 27 : எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கு எதிரான சுதந்திரம்.
சரத்து 28 : மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க உரிமை. கல்வி நிறுவனங்களில் மத போதனைகளை தடைசெய்கிறது.
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
சரத்து 29 : சிறுபான்மையினர் தனது எழுத்து, மொழி, பண்பாடு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கும் உரிமை
சரத்து 30 : சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் உரிமை
சரத்து 31 : சொத்துரிமை. இது 1978ஆம் ஆண்டு 44 வது சட்டத் திருத்தம் மூலமாக நீக்கப்பட்டு சட்ட உரிமையாக கொண்டு செல்லப்பட்டது.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வுகாணும் உரிமை :
சரத்து 32 : தனிப்பட்டவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றத்தை அணுகி உரிமையை பெறுதல்.
சரத்து 32 இந்திய அரசியலமைப்பின் ஆத்மாவும் இதயம் போன்றது என்றவர் டாக்டர் அம்பேத்கர் ஆவார். சரத்து 32 ஐந்து நீதிப்பேராணைகளை கொண்டுள்ளது. நீதிமன்றம் முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடும் கட்டளை அல்லது ஆணை நீதிப் பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப் பேராணைகள் வெளியிட அதிகாரம் பெற்றுள்ளது. அவை ஆட்கொணர் நீதிப்பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை, ஆவண நீதிப் பேராணை, தகுதி முறை வினவும் நீதிப் பேராணை ஆகியனவாகும். இதுபோன்ற ஆணைகளை வெளியிட்டு மக்களின் உரிமைகளை காப்பதால்தான் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுகிறது.
ஆட்கொணர் நீதிப்பேராணை : சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்நீதிப்பேராணை வெளிநபர் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இச்சட்டத்தை தனியார் நிறுவனத்திற்கு எதிராகவும் செயல்படுத்தலாம். ஆனால், குற்றவியல் வழக்குகளில் சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்க கோரி இந்த நீதிப்பேராணை பயன்படுத்த இயலாது.
நீதிப்பேராணை அல்லது செயலுறுத்தும் நீதிப் பேராணை : அரசு அலுவலர் தனது கடமையை செய்ய தவறும்போது நீதிமன்றம் அவரது கடமையின் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கும் நீதிப்பேராணை ஆகும். இதனை குடியரசுத் தலைவர் , ஆளுநர் , தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக பயன்படுத்த முடியாது.
தடையுறுத்தும் நீதிப் பேராணை : உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் தனக்கு கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கு அவற்றின் எல்லைக்கு உட்பட்ட செயலை செய்யாமல் இருக்க ஆணை பிறப்பிப்பது. இதனை நீதிப்பேராணை நீதித்துறைக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும்.
நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை அல்லது ஆவண கேட்பு நீதிப்பேராணை : உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தனக்கு கீழ் உள்ள நீதிமன்றங்கள் அவற்றின் அதிகார வரம்பை மீறி தீர்ப்புகள் வழங்கும் போது அல்லது ஆணை பிறப்பிக்கும் போது அதனை ரத்து
செய்வதாகும்.
தகுதி வினவும் நீதிப்பேராணை : அரசு அலுவலர் ஒருவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் அல்லது அப்பணியை மேற்கொள்ள உண்மையான தொகுதியை பெற்றுள்ளாரா என விளக்கம் பெறுவதாகும். இதை தனியார் மற்றும் தனிப்பட்ட அமைப்புகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பயன்படுத்த இயலாது.
சரத்து 33 : முப்படை வீரர்கள், காவல்துறை, உளவுத்துறை ஆகியோரின் கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
சரத்து 34 : ராணுவ ஆட்சி அமலில் இருக்கும்போது அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் காப்பீடு வழங்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
சரத்து 35 : அடிப்படை உரிமைகளுக்கு மேலும் செயல்திறன் அழைப்பதற்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.
அரசியலமைப்பை நிறுத்தி வைக்கும் சில பிரிவுகள் : இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 352 இன் கீழ் குடியரசுத் தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது சட்ட பிரிவு 19ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆறு வகையான சுதந்திரங்கள் தாமாகவே நிறுத்தப்படுகின்றன. மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பது மூலம் தடை செய்யலாம். குடியரசுத் தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் குடியரசு தலைவரால் இந்திய சட்ட பிரிவு 20 மற்றும் 21 கீழ் வழங்கப்பட்ட உரிமைகளை தடை செய்ய முடியாது.
அடிப்படை உரிமைகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
அடிப்படை உரிமைகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.