வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் விடைக்கேற்ற வினா பற்றி பார்த்தோம்.(பார்க்காதவர்கள் பார்க்க)
இந்தப்பகுதியில் வாக்கிய வகைகளை கண்டறிதல் பற்றி பார்க்கலாம் வாங்க
ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும்.
சில வாக்கிய வகைகளைப் பற்றி கீழே காண்போம்.
1. தனி வாக்கியம்
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு
முடிந்தால் அது தனி வாக்கியம்
(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்
சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்.
2. தொடர் வாக்கியம்
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடியும். தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால்,அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும். பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.
(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை
வழிபட்டான்.
நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.
3. கலவை வாக்கியம் :
ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்
‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.
(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.
யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.
நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு
அறிவுரை வழங்கினார்.
4.கட்டளை வாக்கியம்
பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து
வருமாயின் அது கட்டளை வாக்கியம். இதில் இறுதிச் சொல் வேர்ச்சொல்லாக
வரும்.
(எ.கா) அறம் செய்.
தண்ணீர் கொண்டு வா.
இளமையில் கல்.
5. வினா வாக்கியம்
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.
வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.
(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீ தானே? - ஏ
உளரோ? - ஓ
6. உணர்ச்சி வாக்கியம்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு
வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்
(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!
ஐயகோ! நேருஜி மறைந்தாரே!
7. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி
வாக்கியம்
(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது
மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்
8. வியங்கோள் வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள் வாக்கியம்
(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை
நீடுழி வாழ் - வாழ்த்துதல்
தீயென ஒழி - வைதல்
நல்ல கருத்தினை நாளும் கேள் - வேண்டுகோள்
9.எதிர்மறை வாக்கியம்
ஒரு செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை
வாக்கியம் ஆகும்.
(எ.கா) அவன் கல்வி கற்றிலன்
உடன்பாடு |
எதிர்மறை |
அவன் சென்றான் |
அவன் சென்றிலன் |
ஆமைகள் வேகமாக ஓடும் |
ஆமைகள் வேகமா ஓடா |
புலி புல்லைத் தின்னும் |
புலி புல்லைத் தின்னாது |
மொழி இலக்கிய வளமுடையது |
மொழி இலக்கிய வளமற்றது |
10. உடன்பாட்டு வாக்கியம்
ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு
வாக்கியம் ஆகும்.
(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன
வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு
வாக்கியம் ஆகும்.
(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன
வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
11.நேர்க்கூற்று வாக்கியம்
ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.
(எ.கா)
வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.
12.அயற்கூற்று வாக்கியம்
ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும். வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.
--------------------------------------------------------------------------------------------------------------
வாக்கிய வகைகளைக் கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
--------------------------------------------------------------------------------------------------------------