எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » TNPSC - வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள் - North Indian Kings and Rajputs

TNPSC - வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள் - North Indian Kings and Rajputs

  


வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்

       உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பழமையான நீண்ட வரலாற்றைக் கொண்டதாக திகழ்கிறது. வரலாற்றினை எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக வரலாற்றாளர்கள் வரலாற்றை, காலத்தின் அடிப்படையில் பண்டைய காலம், இடைக்காலம்  மற்றும் நவீன காலம் எனப் பிரித்துள்ளார்கள்.

             இதன் அடிப்படையில் நமது இந்திய நாட்டின் இடைக்கால வரலாற்றை இனி வரும் பாடங்களில் படிக்க இருக்கின்றோம். கி.பி.8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18 ஆம்  நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது. 

இராசபுத்திரர்கள் காலம் (கிபி 647–கிபி  1200)

            ஹர்சர் மற்றும் இரண்டாம் புலிகேசி ஆகியோரின் ஆட்சியுடன் பண்டைய கால வரலாறு முடிவுறுகிறது. ஹர்சர் இறப்பு முதல், கிபி 12ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு இராசபுத்திர வம்சத்தினர்,  வட இந்தியாவின் வரலாற்றை நிர்ணயித்தார்கள். 

இராசபுத்திரர்கள் தோற்றம்

   இராசபுத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி பல அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை  கூறுகிறார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை,

   இராசபுத்திரர்கள்,

(அ) இராமன் (சூரிய குலம்) அல்லது கிருஷ்ணன்(சந்திர குலம்) வழி வந்தவர்கள். 

ஆ) பண்டய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.

இ) சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜர்கள் போன்ற வெளிநாட்டு மரபினை சார்ந்தவர்கள்.

ஈ) அக்கினி குலத்தவர் என்பனவாகும்

ஆட்சியை அமைப்பதற்காக போராட்டம்

    இராசபுத்திரர் காலகட்டத்தில் 36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். 

அவந்தியை ஆண்ட பிரதிகாரர்கள்

வங்காளத்தை ஆண்ட பாலர்கள்

ஆஜ்மீர் மற்றும் டெல்லியை ஆண்ட சௌகான்கள்

கனோஜை ஆண்ட ரத்தோர்கள்

மேவாரை ஆண்ட சிசோதியர் அல்லது குகிலர்கள்

பந்தல்கண்டை ஆண்ட சந்தேலர்கள்

மாளவத்தை ஆண்ட பரமாரர்கள்

வங்காளத்தை ஆண்ட சேனர்கள்

குஜராத்தை ஆண்ட ஆண்ட சோலங்கிகள்

போன்றோர் இருந்தாலும் அனைத்து வகை இராசபுத்திரர்களையும்  ஒருங்கிணைக்க கூடிய வலிமை பெற்றவர்கள் இவர்களுள் எவரும் இல்லை. மேலும் இவர்கள் அனைவரும் ஒற்றுமையின்றி வட இந்தியாவில் ஆட்சி அமைப்பதற்காகவும்,  தங்களின் வலிமையை நிலைநாட்டுவதற்காகவும்,  தொடர்ந்து போர்களில் ஈடுபட்டனர். இவ்வகை தொடர் போராட்டங்களினால் எல்லைப்புற பாதுகாப்பினை வலிமைப்படுத்த தவறிவிட்டனர். இதுவே பிற்காலத்தில் முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு வழி வகுத்தது.

பிரதிகாரர்கள் (கி.பி. 8–11 நூற்றாண்டு)

    பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர்.  எனவே இவர்கள் கூர்ஜரப் பிரதிகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளை கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தார்கள்.

       பிரதிகார மரபை தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர் (கி.பி. 725 –140) ஆவார். இவர் சிந்து பகுதியில் இருந்து போர் தொடுத்து அரேபியர்களை வென்றார். மேலும், கத்தியவார், மாளவம், குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளையும் வென்றார். இவரது தலைநகராக கனோஜ் விளங்கியது.

       நாகபட்டரின் வழிவந்தோரில் வத்சராசா, இரண்டாம் நாகபட்டர் ஆகியோர் இப்பேரரசை மேலும் வலிமையுறச் செய்தனர்.

      பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகிரபோஜன் ஆவார்.  இவரது ஆற்றல்மிகு ஆட்சியில் பிரதிகாரர்களின் பேரரசு, காஷ்மீர் முதல் நர்மதா ஆறு வரையிலும், கத்தியவார் முதல் பீகார் வரையிலும், விரிந்துப் பரந்தது. இவர் சிந்துவின் ஜூனட் முஸ்லிம்களின் படை எடுப்பை முற்றிலும் தடுத்தார்.

     மகேந்திர பாலர் (கி.பி.885–908) மிகிரபோஜனின் மகன் ஆவார். இம்மரபின் ஆற்றல்மிக்க அரசர்களில் மகேந்திர பாலர் ஒருவராவார். இவர் மகதம், வங்காளத்தின் வடபகுதி ஆகிய இடங்களை வென்றார்.

பிரதிகாரர்களின்  வீழ்ச்சி

     பிரதிகாரர்களின் கடைசி மன்னர் ராஜ்யபாலா ஆவார்.   இவரது ஆட்சியில் பேரரசின் பரப்பளவு குறைந்து, கனோஜ் வரை மட்டுமே இருந்தது. கி.பி.1018 ஆம் ஆண்டில் முகமது கஜினி, இராஜ்யபாலா மீது போர் தொடுத்தார். இப்போருக்குப் பின்பு பிரதிகாரர்கள் வீழ்ச்சியடைந்தார்கள்.  இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த ரத்தோர்கள், சௌகான்கள், தோமர்கள், சந்தேலர்கள், பரமாரர்கள், பாலர்கள் ஆகியோர் சுதந்திர அரசுகளாக செயல்படத் தொடங்கினார்கள்.

பிரதிகாரர்கள்–ஒரு பாதுகாப்பு அரண்

    சிந்துவின் ஜூனட் முஸ்லிம்கள் (கி.பி.725) முதல் முகமது கஜினி வரையிலான முஸ்லிம் மன்னர்களின்  படையெடுப்பில் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக பிரதிகாரர்கள் இருந்தனர்.

பாலர்கள் (கி.பி.  8-12 நூற்றாண்டு)

          கி.பி. 750 முதல் 760 வரையிலான காலத்தில் வங்காளத்தில் குழப்பமான சூழல் நிலவியது. இதற்கு ஒரு முடிவு ஏற்படுத்தும் விதமாக பாலர் இனத் தலைவர்கள் ஒன்று கூடி கோபாலரை வங்காளம் மற்றும் பீகார் முழுமைக்கும் மன்னராக தேர்ந்தெடுத்தனர்.

       கோபாலர் (கி.பி. 765–769), பாலர் மரபைத் தொடங்கினார். இவர் தமது நாட்டின் எல்லையை மகதம் வரை விரிவுபடுத்தினார். இவ்வரசகுலம் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியையும் ஆட்சி செய்தது.

         கோபாலருக்கு பின் அவரின் மகன் தர்மபாலர் (கி.பி. 769– 815) மன்னரானார். இவர் பிரதிகாரர்களை வென்றதோடு கனோஜ், வங்காளம்,  பீகார் ஆகிய இடங்களை கைப்பற்றி வட இந்தியா முழுவதும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். பௌத்த மதத்தில்  பற்று மிக்க தர்மபாலர் பல பௌத்த மடங்களை கட்டினார். புகழ்மிக்க விக்ரமசீலா பல்கலைக் கழகத்தை நிறுவியதோடு நாளந்தா பல்கலைக்கழகத்தினை புதுப்பித்தார்.  

      தேவபாலர் (கி.பி.815–855) தர்மபாலரின் மகன் ஆவார். இவர் போர்களின் மூலமாக புதிய பகுதிகளை வென்றதோடு அசாம், ஒரிசா ஆகியவற்றையும் கைப்பற்றினார். இவரது வழித்தோன்றல்கள் வலிமை பெற்றவர்களாக இருந்தனர்.

      மகிபாலர் (கி.பி. 998–1038) ஆட்சி ஏற்றத்தை தொடர்ந்து நாடு மீண்டும் வலிமை பெறத் தொடங்கியது. எனினும் இவரது இறப்பிற்குப் பிறகு பாலர் வம்சம் வலிமை குன்றியது. பாலர் மரபின் கடைசி மன்னர் கோவிந்த பாலராவார்.  கிபி 12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பாலர் மரபு வீழ்ச்சி அடைந்தது. வங்காளப் பகுதியில் சேனர்கள் எழுச்சி பெற்று புதிய ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

கனோஜ் பகுதிக்காக மூன்று அரசுகள் இடையே போராட்டம்

       இந்தியாவின் மத்திய பகுதியை ஆட்சிசெய்த பிரதிகாரர்கள் , வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த ராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் வளம் நிறைந்த கங்கைச் சமவெளிப் பகுதி மற்றும் கன்னோஜ் பகுதியை கைப்பற்றவதிலேயே நோக்கமாக இருந்தனர்.

     எனவே மூன்று அரசுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து போரிட்டன. ஏறத்தாழ 200 ஆண்டுகள் தொடர்ந்து இப்போராட்டம் மூன்று அரசுகளையுமே வலிமை இழக்கச் செய்தன. துருக்கியர்கள் இன் இந்திய வெற்றிக்கு இதுவே மறைமுகக் காரணமானது எனலாம்.

டெல்லியை ஆண்ட தோமர்கள்

     கனோஜ் பகுதியில் இருந்த, பிரதிகாரர்களிடம் திறை செலுத்திய அரசர்களே தோமர்கள் ஆவர்.. பின்னர் இவர்கள் தனி அரசை ஏற்படுத்தி டெல்லி நகரை கி.பி. 736 ல் நிறுவினார்கள். கிபி 1043 இல் மகிபால தோமர், தானேஸ்வரம், ஹான்சி, நாகர் கோட் ஆகிய இடங்களை வென்றார். கிபி 12 ஆம் நூற்றாண்டில் சொளகான்கள் டெல்லியைக் கைப்பற்றினர். எனவே தோமர்கள், சௌகான்களுன்கு  திறை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

டெல்லி மற்றும் ஆஜ்மீர் பகுதியில் ஆட்சி செலுத்திய சௌகான்கள் 

கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்களாக இருந்தவர்களே சௌகான்கள் ஆவர். கி.பி 11 ஆம்  நூற்றாண்டில் அஜ்மீர் பகுதியை சுதந்திர அரசாக அறிவித்த சௌகான்கள்,  கிபி 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாளவ பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜைனியையும், தோமர்களிடமிருந்து  டெல்லியையும் வென்றனர். பின்னர் தம் தலைநகரை டெல்லிக்கு மாற்றிக் கொண்டனர். சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மாமன்னர் பிரிதிவிராஜ் சௌகான் ஆவார்.

பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் கனோஜ் பகுதியில் தெளிவற்ற சூழல் நிலவியது. இதனை பயன்படுத்தி ரத்தோர்கள் கனோஜ் அரசைக் கைப்பற்றினார். கி.பி. 1090 முதல் 1194 வரையில் ஆண்ட  இவர்களின் ஜெயச்சந்திரன் என்பவரே புகழுடன் ஆட்சி செய்த கடைசி மன்னர் ஆவார்.  முகமது கோரியுடன் கி.பி 1194 இல் நடந்த சந்தவார் போரில் இவர் கொல்லப்பட்டார்.

பந்தல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த சந்தேலர்கள்


        பிரதிகாரர்களின் ஆட்சியிலிருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9 ஆம்  நூற்றாண்டில் தனி அரசாக சந்தேலர்கள் அமைத்தனர். சந்தேலர்களின்  மன்னன் யசோவர்மன் மகோபாவை தலைநகராக நிறுவினார்.  அவர்களின் கடைசி அரசர் பாரமால். இவரை கிபி 1203 இல் குத்புதீன் ஐபக்  தோற்கடித்தார். கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும். கஜுரஹோவில் பல அழகிய கோவில்களை இவர்கள் கட்டினார்கள்.இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் புகழ்பெற்றதாகும்.(இதன் காலகட்டம் 1050) 

மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்

       சித்தூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிசோதிய மரபினை தொடங்கியவர் பாபாரவால் ஆவார். இவர் வழிவந்த இராணா ரத்தன் சிங்கை கி.பி 1307 இல்அலாவுதீன் கில்ஜி போரிட்டு தோற்கடித்தார். இதனை அறிந்த இராணரத்தன் சிங்கின் மனைவி ராணி பத்மினி, ஜவஹர் என்ற வழக்கத்தின்படி தீயில் குதித்து இறந்தார். முகலாயர்கள் காலத்தில் ராணா சங்கா, மகாராணா பிரதாப் ஆகியோர் முகலாயர்கள் எதிர்த்து வலிமையுடன் போர் புரிந்தார்கள் என்பது குறிப்பிட தக்கதாகும்.

மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள் 

       பிரதிகாரர்களின் ஆளுகைக்கு உட்பட்ட அரசர்களாக இருந்த பரமாரர்கள் கிபி 10ஆம் நூற்றாண்டில் தம்மை சுதந்திர அரசாக அறிவித்து கொண்டனர். இவர்களது தலைநகராக தாரா விளங்கியது.

   இராஜாபோஜ் (கி.பி.1018–1069) என்பவர் இம்மரபின் புகழ்மிக்க மன்னராவார். இவர் போபால் நகரின் அருகில் அழகிய ஏரி (250 சதுர மைல்) ஒன்றை அமைத்தார். தாராவில் சமஸ்கிருத கல்லூரி ஒன்றை நிறுவினார். அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பால் பரமாரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.

இராசபுத்திரர்களின் சிறப்பியல்புகள்

    இராசபுத்திரர்கள் வீரமிகுந்தவர்களாகவும், சிறந்த போர் வீரர்களாகவும் இருந்தனர். பெண்களையும், நலிந்தவர்களையும் காக்கும் குணம் படைத்தவர்களாக இருந்தனர். பெண்கள் கற்பினை உயிராக மதித்து வாழ்ந்தார்கள். பெண்கள் கல்வி கற்றவவர்களாக இருந்தனர். அவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்புடன் நடத்தப்பட்டார்கள் .பெண்கள், பொது வாழ்விலும் போர் செய்வதிலும் ஈடுபட்டார்கள். குழந்தைத் திருமணமும், பலதாரமணமும் நடைமுறையில் இருந்தது. எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதை விட இறப்பதே மேலாக கருதியதால் ஜவ்ஹர் முறையும், உடன்கட்டை ஏறும் வழக்கில் இருந்தன.

சமயம்

     இராசபுத்திரர்கள் இந்து மதத்தை போற்றி வளர்த்தனர். சமண சமயம், புத்த சமயம் ஆகியவைகளும் இவர்கள் காலத்தில் வளரத் தொடங்கியது.

அரசு நிர்வாகம்

            இராசபுத்திரர்களின் அரசு நிலமான்ய முறையினை அடிப்படையாக கொண்டிருந்தது, நாட்டினை பல ஜாகிர்களாகப் பிரிந்தனர். அதன் தலைவர்களான ஜாகிர்தார்கள், வரி வசூலித்து உரிய பங்கை மன்னரிடம் செலுத்தினர். ஜாகிர் தார்கள் படையை தனியே பராமரித்ததோடு மன்னர்க்கு தேவைப்படும் சமயத்தில் படை உதவியும் செய்தனர்.

இராசபுத்திரர்களின் பங்களிப்பு

         இராசபுத்திரர்கள், மொழி, இலக்கியம், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பாடுபட்டார்கள்.

மொழியும், இலக்கியமும்

           இவர்களின் காலத்தில் மராத்தி, குஜராத்தி, வங்க மொழி, போன்ற வட்டார மொழிகள் சிறப்பாக வளர்ச்சி அடைந்தன. பக்தி இயக்கியத்தினரும், நாட்டுப்புற பாடல்கள் பாடிய கலைஞர்களும் வட்டார மொழி வளர்ச்சிக்கு வழி கோலினார்கள். இவர்கள் கால இலக்கியங்களில்  கல்ஹணர் எழுதிய இராஜதரங்கிணி, ஜெயதேவரின் கீதகோவிந்தம், சோம தேவரின் கதா சரித சாகரம் ஆகியன சிறப்பான படைப்புகள் ஆகும். பிருத்திவிராச் சௌகானின் அவைப் புலவரான சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்ரசோ என்னும் நூலானது, பிரித்திவிராஜனின் படையெடுப்புகளைப் பற்றி விளக்குவதாகும். பாஸ்கராச்சாரியா எழுதிய சித்தாந்த சிரோமணியானது ஒரு சிறந்த வானவியல் நூலாகும். மகேந்திர பாலர், மகிபாலர் ஆகியோரின் அவைப் புலவராக இராசசேகரன் திகழ்ந்தார். கற்பூர மஞ்சரி, பால இராமாயணம் ஆகியன இராசசேகரினின் சிறந்த படைப்புகள் ஆகும்.

கலை மற்றும் கட்டிடக்கலை

  இராசபுத்திரர்கள் காலத்தில் வண்ணச் சுவர் ஓவியங்களும், நுண்ஓவியங்களும் பிரபலமடைந்தன. கஜுராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலும,  கோனார்க்கில் உள்ள சூரிய கோயிலும், அபு மலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயில் கட்டிடக்கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.


        கஜுராஹோ கோயில், இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலா மையமாக விளங்குகிறது. ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகளும், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும், இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.

இராசபுத்திர அரசுகளின் முடிவு

      தங்களுக்குள் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்த இராசபுத்திர அரசர்களை அடக்கி, ஒருங்கிணைத்து, வெளிநாட்டவர் படையெடுப்புகளை முறியடிக்கக் கூடிய வலிமையான மைய அமைப்பு எதுவும் இல்லாத அரசியல் சூழலை பயன்படுத்தி, துருக்கியர்கள் தங்களின் ஆட்சியை இந்தியாவில் அமைத்தனர். 

வட இந்திய அரசுகள் - ராசபுத்திரர்கள் பாடத்தை படித்தீர்களா? பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் கீழே உள்ள இணைப்பில் சென்று தேர்வெழுதுங்கள்..TOUCH HERE



Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template