Ads Area

TNPSC - உற்பத்தி - உற்பத்தியின் வகைகள் - INDIAN ECONOMICS - இந்தியப் பொருளாதாரம்

உற்பத்தி - பொருள் விளக்கம் :

நுகர்வோரின் பயன்பாட்டுக்காக மூலப் பொருளையும் மூலப்பொருள் இல்லாதவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும். 

ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப சிறந்த சேவையையும் மதிப்பையும் அளிப்பதில் இன்றியமையாத இடத்தை உற்பத்தி பெறுகிறது. 

பொருளாதாரத்தில் உற்பத்தி என்னும் சொல் மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது அதாவது பயன்பாட்டை உருவாக்குதலே உற்பத்தியாகும். 

பயன்பாடு என்பது நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக அதன் இயல்பைப் பொறுத்து வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு காலப்பயன்பாடு, என வகைப்படுத்தலாம்

பயன்பாட்டின் வகைகள்:

வடிவப் பயன்பாடு
இடப் பயன்பாடு
காலப்பயன்பாடு 

என மூன்று வகைப்படும் 

வடிவப் பயன்பாடு: 

ஒரு பொருளின் வடிவம் மாற்றப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது.

எடுத்துக்காட்டு: 

விளை பொருளாகிய பருத்தியைப் பயன்படுத்தி ஆடைகள் உருவாக்கப்படும் போது அதன் தேவையும் பயன்பாடும் உயர்கின்றன. .

இடப் பயன்பாடு: 

ஒரு விளை பொருளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் போது அதன் பயன்பாடு மிகுதியாகிறது. 

எடுத்துக்காட்டு:

விளை பொருளான அரிசி தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படும் போது அதன் தேவையும் பயன்பாடும் அதிகரிக்கின்றன. 

காலப் பயன்பாடு: 

ஒரு விளை பொருளை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கும்போது அதன் பயன்பாடு மிகுகிறது. 

எடுத்துக்காட்டு: 

நுகர்வோர்கள் ஆண்டு முழுவதும் பயன்படுத்த கூடிய உணவுப் பயிர்களான நெல், கோதுமை போன்றவற்றை சேமித்து வைப்பதால் அவற்றின் தேவையும் மிகுதி ஆகின்றன.


உற்பத்தியின் வகைகள் மூன்று வகைப்படும்

முதல்நிலை உற்பத்தி
இரண்டாம் நிலை உற்பத்தி
மூன்றாம் நிலை உற்பத்தி 

முதன்மை நிலை உற்பத்தி 

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை நேரடியாக பயன்படுத்தி செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை உற்பத்தி என்கிறோம்.

முதன்மை நிலையில் வேளாண்மைக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இதனை வேளாண்மை துறை உற்பத்தி எனவும் கூறுவர். 

வேளாண்மையும் அதனுடைய தொடர்புடைய செயல்கள் வளங்களைப் பாதுகாத்தல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய்களை பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகள் முதன்மை நிலை உற்பத்தி ஆகும்.

இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிருந்தும் இயற்கை வளங்களை பிரித்தெடுக்கின்றன. 

இரண்டாம் நிலை உற்பத்தி

முதன்மை நிலையின் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்தி புதிய உற்பத்திப் பொருளாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம். 

இரண்டாம் நிலை உற்பத்தியில் தொழிலுக்கு முதலிடம் அழிக்கப்படுவதால் இதனை தொழில்துறை உற்பத்தி எனவும் கூறுவர்.

எடுத்துக்காட்டாக மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல், இரும்புத்தாது விலிருந்து பயன்படக் கூடிய பல பொருட்களைத் தயாரித்தல் போன்றவற்றை கூறலாம். மேலும் நான்கு சக்கரம் வாகனங்கள் , ஆடைகள், ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்தலும், பொறியியல் துறை சார்ந்த பணிகள், கட்டடப் பணிகள் சார்ந்த தொழில்களும் இரண்டாம் நிலை உற்பத்தியில் அடங்கும்

மூன்றாம் நிலை உற்பத்தி 

முதல் நிலை இரண்டாம் நிலை களில் உற்பத்திப் பொருள்களை சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வது மூன்றாம் நிலை உற்பத்தியாகும். மூன்றாம் நிலையில் சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் இதனை சேவைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர். 

சேவைத்துறை நிறுவனமானது உற்பத்தி பொருள்களை தொழில் துறை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக வழங்குகிறது. எடுத்துக்காட்டாக வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தி தொடர்பு, சட்டம் நிர்வாகம் கல்வி உடல்நலப் பாதுகாப்பு போன்ற அரசு துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவைத் துறை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன.

Bottom Post Ad

Ads Area