பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு - இந்திய வரலாறு - TNPSC

 பாரசீகம் மற்றும் கிரேக்கம்



கிரேக்க வரலாற்றாளர் ஹெரோடோடஸின்  கூற்றின்படி காந்தாரம், ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது மற்றும் செல்வம் மிக்க சக்தியாக இருந்தது.  மகா அலெக்ஸாண்டரின் படையெடுப்பு வரையிலும் அது பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

பொ.ஆ.மு 530 காலங்களில் பாரசீகப் பேரரசன் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து கபீஸா என்ற நகரை அழித்தார். 

முதலாம் டாரியஸின் கல்வெட்டுகள் சிந்து பகுதியில் பாரசீகர்கள் இருந்ததை குறிப்பிடுகிறது. கதாரா, ஹராவதி பகுதிகளின் மக்கள் ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள் என்றும் கூறப்படுகிறது.  

ஈரானிலுள்ள பெர்சிபோலிசில் காணப்படும் முதலாம் டாரியஸின் கல்வெட்டில் தான் இந்து என்ற வார்த்தை முதன்முறையாக காணப்படுகிறது.  பொதுவாக நதியையும் குறிப்பாக சிந்து நதியையும் குறிக்கும் சிந்து என்ற சொல்  பாரசீகத்தில் இந்து ஆனது.  கிரேக்கர்கள் சிந்து என்பதில் உள்ள S-யை நீக்கிவிட்டு இந்து என்றார்கள்.  அது பின்னர் ஹிந்து என்றானது, பின்னர் அதிலிருந்து இந்தியா வந்தது

தட்சசீலம்

தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது. பொ.ஆ.மு.5 - 4-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே தட்சசீலம் பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசின் பகுதியாக இருந்தது.  கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள வணிக பெருவழியில் அதன்  அமைவிடம் இருந்ததால் சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது.  தட்சசீலம் முக்கியமான கல்வி கலாச்சார மையமாக உருவானது. கல்விக்காக மாணவர்கள் வெகு தூரங்களிலிருந்து அங்கு வந்தார்கள்.

1940களில் சர் ஜான் மார்ஷல் நடத்திய ஆய்வுகளின் போது இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.  எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளை படைத்ததாக தட்சசீலம் கருதப்படுகிறது.  பாணினி  தனது புகழ்பெற்ற படைப்பான அஷ்டத்யாயி என்ற இலக்கிய நூலை இங்குதான் எழுதியதாக நம்பப்படுகிறது.

பாரசீக தொடர்பின் தாக்கம் : 

கிமு ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் வடமேற்குப் பகுதி பாரசீகப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்ததால் இந்த பகுதி பாரசீக மற்றும் இந்திய பண்பாடுகளின் சங்கமமாக மாறியது. பாரசீக தொடர்பு பண்டைய  இந்தியாவின் கலை, கட்டிடக் கலை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்த பண்பாட்டுத் தாக்கம் காந்தாரப் பகுதியில் அதிகமாக இருந்தது.  மிக முக்கியமான தாக்கம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் கரோஷ்டி எழுத்து முறையின் வளர்ச்சி ஆகும்.  இந்த கரோஷ்டி எழுத்தை காந்தாரப் பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்காக அசோகர் பயன்படுத்தினார்.  இது பாரசீகத்தின் ஆக்கிமீனைட் பேரரசில் பரவலாக பயன்பட்டு வந்த அராமிக்கிலிருந்து உருவானதாகும். அராமிக் போலவே கரோஷ்டியும்  வலமிருந்து இடது புறமாக எழுதப்படும் எழுத்து முறையாகும்.  பாரசீகத்தில் சிக்லோய் என்ற வெள்ளி நாணயம் இப்பகுதியிலிருந்து மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டதேயாகும்.  இந்தியாவின் மிகப் பழமையான நாணயங்கள் மகாஜனபத அரசின் காலத்தவையாகும்.  நாணயத்திற்கான இந்திய சொல்லான கார்சா பாரசீக மொழியில் இருந்து வந்ததாகும்.  இந்த நாணயங்கள் பாரசீக நாணயங்களை பார்த்து உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்காலகட்டத்தில் இந்த நாணயங்களின் புழக்கம் இந்தியா, பாரசீகத்திற்கு இடையில் வணிகத் தொடர்பு இருந்ததை  உணர்த்துகிறது.  

சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு :

ரிக் வேதத்திற்கும் அவஸ்தாவிற்கும்  பல மொழியியல் ஒற்றுமைகள் காணப்படுகின்றன.  ஆரியர்கள் என்ற சொல்லை பண்டைய கால பாரசீகர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்திய மொழி பண்பாட்டு ஆய்வாளர் தாமஸ் பரோவின் கூற்றுப்படி உச்சரிப்பு மட்டும் காலப்போக்கில் மாறி இருக்கலாம். பொ.ஆ.மு 1380-யைச் சேர்ந்த போகஸ் கோய் (வடகிழக்கு சிரியா) கல்வெட்டு ஒன்று ஒரு ஹிட்டைட் அரசனுக்கும் மிட்டன்னி அரசனுக்கும்  இடையிலான ஒப்பந்தம் பற்றி கூறுகிறது. அது சில ரிக் வேதக் கடவுள்களான இந்திரா,  மித்ரா, வருணா, அஸ்வினி ஆகிய பெயர்களைக் குறிப்பிடுகிறது.

அலெக்ஸாண்டர் படையெடுப்பு :

அலெக்ஸாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றின் காலகணிப்பு முறைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.  இந்தியாவில் 18 மாதங்கள் மட்டுமே தங்கினார்.  ஆனால் அப்படையெடுப்பு இந்திய மக்களிடையே ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.  மாசிடோனியாவை ஆண்ட பிலிப்பின் மகன் தான் அலெக்ஸாணடர் ஆவார்.  புகழ்பெற்ற தத்துவஞானி அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரின் ஆசிரியர் ஆவார்.  தன் சிறு வயது முதல் அலெக்ஸாண்டர் ஹெர்குலசைப் போல சிறந்த வலிமையான வீரனாக விளங்க வேண்டும் என விரும்பினார்.  தனது தந்தையின் மறைவுக்கு பிறகு அரியணை ஏறிய அலெக்ஸாண்டருக்கு அப்போது வயது 20 ஆகும்.  அவர் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற பேரவா கொண்டவராக விளங்கினார். 

கி.மு.334-கி.மு330 வரை அலெக்ஸாண்டர் ஆசியா மைனர், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் அரசர்களைத் தோற்கடித்தார்.  கி.மு. 328-க்குள் பாரசீகத்திலுள்ள எல்லா பிரதேசங்களையும் தற்போதைய ஆப்கானிஸ்தானத்தையும் வெற்றிகொண்டு பாரசீகத்தின் மகா மன்னர் என்ற பட்டத்தை பெற்றார். தன நந்தரின் ஆட்சி காலத்தில் அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியா மீது (கிமு 327 - 325) படையெடுத்தார். பல வகைகளில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும்.  அது பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு தொடரப்போகும் இந்தியா மற்றும் மேற்குலகிற்கு இடையிலான தொடர்பின் ஆரம்பத்தை குறித்து கிரேக்க வரலாற்றாசிரியர்கள் இந்தியா பற்றி எழுத ஆரம்பித்தார்கள். 

கிரேக்க அரச பிரதிநிதிகளும் அரசர்களும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆட்சி செய்தார்கள்.  அது இந்திய ஆட்சியிலும் கலைகளிலும் புதிய பாணிகளை உருவாக்கியது.  அலெக்சாண்டர் பஞ்சாப் பகுதியில் தனது வெற்றிக்கு பிறகு மகதப் பேரரசைத் தாக்கும் நோக்கத்தோடு மேலும் கிழக்கு நோக்கி நகர விரும்பினார்.  எனினும் அவருடைய படையினர் கிழக்கில் மாபெரும் பேரரசரை(நந்தரை) பற்றியும் அவருடைய பெரிய ராணுவத்தை பற்றியும் கேள்விப்பட்டிருந்ததால் அத்தகைய வலுவான எதிரியுடன் போரில் ஈடுபட மறுத்து விட்டார்கள்.  

கிமு 326-இல் பாரசீகர்களை  தோற்கடித்து விட்டு அலெக்சாண்டர் இந்திய துணைக்கண்டத்திற்குள் நுழைந்தபோது தட்சசீலத்தின் அரசரான அம்பி போர் புரியாமலே அவரிடம் சரணடைந்து அவரது மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார். போரஸ் ஜீலம் பகுதியை ஆட்சி செய்தவர்.  அவர் அலெக்ஸாண்டரிடம் அடிபணிய மறுத்து, அவரை எதிர்த்தார்.  இருவரின் படைகளும் ஜீலம் ஆற்றங்கரைகளில் ஹைடாஸ்பெஸ் என்னும் இடத்தில் கி.மு.326-இல் ஒன்றையொன்று எதிர்கொண்டன.  போரஸ் மிக சிறந்த வீரனாக இருந்த போதிலும், எதிர்பாராத இத்தாக்குதலினால் அப்போரில் தோல்வியடைந்து கைது செய்யப்பட்டார்.  கைதியாக அலெக்ஸாண்டர் முன்நின்ற போரஸிடம் அவரை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டார் கேட்டார்.  சற்றும் தயக்கமின்றி தன்னை ஒரு அரசனாக மதித்து நடத்த வேண்டும் என்று போரஸ் பதிலளித்தார்.  போரஸின் தோற்றப்பொலிவும், அவருடைய அந்த பதிலும் அலெக்ஸாண்டரை மிகவும் கவர்ந்தன.  எனவே, அவரை பெருந்தன்மையுடன் நடத்திய அலெக்ஸாண்டர் போரஸின் நாடான ஜீலம் பகுதிகளை அவரிடமே திருப்பிக் கொடுத்தார். பின்னர் அலெக்ஸாண்டர் ராவி நதியையும் கடந்து காத்தர்களையும், சங்களர்களையும் வெற்றி கொண்டார்.  பின்னர் அவரது படைகள் பியாஸ் ஆற்றங்கரையை அடைந்த போது நெடுநாட்கள்  தாயகத்தை விட்டுப்பிரிந்து துயரும் உடல்சோர்வும் அவர்களை வாட்டின. எனவே, மேற்கொண்டு படையெடுப்பை தொடர அவர்கள் மறுத்தனர்.  அதனால் அலெக்ஸாண்டர் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று.  அலெக்ஸாண்டர் தான் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றாக பிரித்தார்.  அப்பகுதிகளை தம் தளபதிகள் வசம் ஒப்படைத்தார்.  அதன்படி, இந்தியாவின் வடமேற்கு பகுதி செல்யூகஸ் நிகேடர் என்பவரிடம் கொடுக்கப்பட்டது.  பின்நாட்களில் சந்திரகுப்த மெளரியரால் செல்யூகஸ் நிகேடர் தோற்கடிக்கப்பட்டார்.  தாயகம் திரும்பும் வழியில்  பாக்தாத் நகருக்கு அருகிலுள்ள பாபிலோனில் அலெக்சாண்டர் டைபாய்டு காரணமாக  இறந்தார்.

இந்தியாவில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் விளைவுகள்:

அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க மாகாணங்கள் அமைவதற்கு வழிவகுத்தது. மேற்குலகிற்காக வணிக பெருவழிகள் திறக்கப்பட்டன. 4 வணிக பெருவழிகள் பயன்பாட்டில் இருந்தன.  இதனால் கிரேக்க வணிகர்களும் கைவினை கலைஞர்களும் இந்தியா வந்தனர்.  இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்பட இது உதவியது. வணிகத் தொடர்பு  அதிகரிக்க ஆரம்பித்தவுடன் இந்தியாவின்  வட மேற்கில் பல கிரேக்க குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. காபுல் அருகிலிருந்த அலெக்சாண்டிரியா, பாகிஸ்தானின் பெஷாவர் அருகே இருந்த பூகிஃபெலா, சிந்துவில்  இருந்த அலெக்ஸாண்டரியா ஆகியன சில முதன்மையான கிரேக்க குடியிருப்புகள் ஆகும்.  இந்தியாவை குறித்து கிரேக்கர்கள் எழுதிய பதிவுகள் சற்று மிகையானவை என்றாலும் கூட இந்தியா பற்றி மிக அரிய தகவல்களைத் தருகின்றன.  அலெக்சாண்டரின் மரணத்தால் வடமேற்கில் உருவான வெற்றிடம் சந்திரகுப்த மௌரியர்  மகத அரியணையை கைப்பற்ற உதவியது.  வடமேற்கில் மேலும் பல சிறு  அரசர்களையும் கைப்பற்றி,  அந்த பகுதி முழுவதையும் தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளவும் அவ்வெற்றிடம் சந்திரகுப்த மெளரியருக்கு உதவியது.


பாரசீகம் மற்றும் கிரேக்க படையெடுப்பு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 5 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.