பாஸ்கல் விதி (Pascal's Law)
பாஸ்கல் தத்துவமானது பிரான்ஸ் நாட்டின் கணிதம் மற்றும் இயற்பியல் மேதையான பிளைஸ் பாஸ்கல் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புற விசையானது திரவங்களின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பதே பாஸ்கல் விதி ஆகும்.
Image courtesy - www.britannica.com |
ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும்போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும். இதுவே ஆர்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.
பாஸ்கல் விதியின் விளைவே ஆக்கிமிடிஸின் தத்துவம் ஆகும். ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ் ஆவார்.
மிதத்தல் விதிகள் :
1. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்கு சமம் ஆகும்.
2. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
பிளமிங்கின் இடக்கை விதி (Flemming's Left Hand Rule)
Image courtesy - www.britannica.com |
இதை கண்டுபிடித்தவர் ஜான் ஆம்பிரோஸ் பிளம்மிங் ஆவார்.
இடது கரத்தின் பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது மின்னோட்டத்தின் திசையை நடுவிரலும், சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் குறித்தால் , பெருவிரலானது கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கிறது .
இந்த பிளமிங்கின் இடக்கை விதி படி இரண்டு கடத்திகளிலும் ஒரே திசையில் மின்னோட்டம் பாயுமானால் இரண்டு கடத்திகளின் மீது செயல்படும் விசைகளும் ஒன்றையொன்று நோக்கி செயல்படும். மின்னோட்டம் பாயும் இரு இணையாக வைக்கப்பட்ட கடத்திகளுக்கு இடையேயான விசையைப் பற்றி அறிந்து கொள்ள பிளமிங்கின் இடது கை விதி உதவுகிறது.
பிளம்மிங் வலது கை விதி :(Flemming's Right Hand Rule)
வலது கையின் பெருவிரல், சுட்டு விரல், நடுவிரல் ஆகியவற்றை நீளவாக்கில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நீட்டும்போது சுட்டு விரல் காந்தப்புலத்தின் திசையையும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால் நடுவிரல் மின்னோட்ட திசையை குறிக்கும். பிளமிங்கின் வலக்கை விதி மின்னியற்றி விதி என்றும் அழைக்கப்படுகிறது.
இது மாறுதிசை மின்னோட்ட (AC) மின்னியற்றி மற்றும் நேர்திசை மின்னோட்ட (DC) மின்னியற்றிகளின் ஒப்பீடுகளை கண்டறிய பயன்படுகிறது.
மையநோக்கு முடுக்கம் (Centripetal Force): வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது வட்டத்தின் மையத்தை நோக்கிச் செயல்படும் விசை, மையநோக்கு விசை எனப்படும்.
மையவிலக்கு விசை (Centrifugal Force): வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் மீது வட்டத்தின் மையத்திலிருந்து வெளிப்புறம் நோக்கி செயல்படும் விசை, மையவிலக்கு விசை எனப்படும்.
ஒளி எதிரொளிப்பு விதிகள் (Laws of Reflection)
image courtesy @ tn govt |
1. படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய மூன்றும் ஒரே தளத்தில் அமையும்.
2. படுகோணமும் எதிரொளிப்புக்கோணமும் சமம்.
ஒளிவிலகல் விதிகள் (Laws of Refraction)
ஒளிவிலகல் விதி ஸ்நெல் விதி எனவும் அழைக்கப்படுகிறது.
1. படுகதிர், விலகு கதிர் , படு புள்ளியில் இரு ஒளிபுகும் ஊடகங்களுக்கு இடையிலான தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
2. கொடுக்கப்பட்ட இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு மாறிலி ஆகும். சைன் i / சைன் r =மாறிலி. i என்பது படுகோணம், r என்பது விலகு கோணம்.
கெப்ளரின் விதிகள்
1600-களின் தொடக்கத்தில் ஜோகன்ஸ் கெப்ளர் கோள்களின் இயக்கத்திற்கான மூன்று விதிகளை வெளியிட்டார். இவர் தனது வழிகாட்டியான டைகோ பிராகே என்பவரால் கவனமாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் மூலம் சூரிய மைய அமைப்பின் அடிப்படையில் மூன்று விதிகளை கூறினார். கோள்களின் இயக்கத்திற்கான கெப்ளரின் கருத்துக்கள் அப்போது ஒப்புக் கொள்ளவில்லை . எனினும் அவரது விதிகள் கோள்கள் மற்றும் துணைக் கோள்களின் இயக்கத்தை பற்றிய மிகச் சரியான கணிப்பு ஆகும்.
1. நீள்வட்டங்களின் விதி (The Law of Ellipses) :
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன
.
2.சம பரப்புகளின் விதி (The Law of Equal Areas)
கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சம பரப்புகளை கடக்கிறது..
3. ஒத்திசைவுகளின் விதி (The Law of Harmonies) :
எந்த இரு கோள்களுக்கும் சுற்றுக் காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதி அளவு பேரச்சுகளின் (semi-major axis) மும்மடிகளின் விகிதத்திற்கு சமமாகும்.
நியூட்டனின் இயக்க விதிகள் :
நியூட்டனின் இயக்க விதிகள் ஒரு பொருளின் மீது ஒரு விசை தாக்கும் போது, அப்பொருளின் இயக்கத்தில் ஏற்படும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன
நியூட்டனின் முதலாம் இயக்க விதி (Law of inertia)
ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் எனப்படும். அதாவது ஓய்வு நிலையில் ஒரு பொருள் இருப்பின் அது நிலைமம் எனப்படும். இதனால் நியூட்டனின் முதல் இயக்க விதியை நிலைம விதி எனலாம்.
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி (Law of Motion)
ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது.
இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும். இதனால் இரண்டாவது விதியை விசை விதி எனலாம். நியூட்டன் விசையைக் கீழ்க் கண்ட சமன்பாட்டால் குறிப்பிட்டார்:
F=ma
இதில் F என்பது விசை (அலகு நியூட்டன்), m என்பது நிறை (அலகு கிலோ கிராம்), மற்றும் a என்பது முடுக்கம் (அலகு மீட்டர் / விநாடி2).
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி (Law of action and reaction)
ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்குச் சமமானதும், எதிர்த்திசையிலும் அமைந்த எதிர்விசை உருவாகும். புறவிசை ஒரு பொருளின் மீதும் எதிர்விசை மற்றொரு பொருளின் மீதும் செயல்படுவதால் ஒன்றையொன்று இழக்கச் செய்வதில்லை. அதாவது புறவிசையும்,எதிர்விசையும் ஒரே பொருளில் உருவாவதில்லை.
ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கு இணையான ஆனால் எதிர்திசையில் அமைவதுமான ஓர் எதிர்வினை உண்டு. இதுவே நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஆகும்.
இயற்பியல் விதிகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.