எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » சிந்து சமவெளியின் பொருளாதாரம் - நாகரிகத்தின் வீழ்ச்சி

சிந்து சமவெளியின் பொருளாதாரம் - நாகரிகத்தின் வீழ்ச்சி

சிந்து சமவெளியின் நாகரிகத்தின் ஆய்வுகள் மற்றும் நாகரிகத்தின் அமைப்பு கட்டடக் கலை ஆகியவை பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அதற்கு பயன்பட்ட முக்கியமான நகரங்களைப் பற்றி  முதல்ல பார்ப்போம்.

லோத்தல் :

      குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  1957ல் எஸ்.ஆர்.ராவ் என்பவரால் இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.  இது ஒரு துறைமுக நகரம் ஆகும்.  மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் துறைமுகமாக லோத்தல் துறைமுகம் விளங்கியது. இது ஒரு வாணிப மையம் ஆகும்.  துறைமுகத்தின் மூலமாக மெசபடோமியா, சுமேரியா, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் வாணிபம் நடந்தது.  சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது.  லோத்தல் நகரத்தில் முதல் முதலாக நெல் பயிரிடப்பட்ட இடம் ரங்பூர் ஆகும்.

சான்குதாரோ :

    சிந்து மாகாணத்தில் அமைந்துள்ளது.எம்.ஜி.மஜீம்தார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  கோட்டைகள் இல்லாத  சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரே நகரம் சான்குதாரோ ஆகும்.  இங்கு அதிக அளவில் தொழிற்சாலைகள்  இருந்ததன.  உலோகத் தொழில் அதிகமான நடைபெற்றதால் உலோக தொழில் நகரம் என அழைக்கப்படுகிறது.

சுகர்கோடா

   சுகர்கோடா ஜே.பி ஜோசி என்பவரால் கண்டறியப்பட்டது. இது குஜராத் மாகாணத்தில் அமைந்துள்ளது.  இங்கு குதிரைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

காலிபங்கன்

   காலிபங்கன் என்ற சொல்லுக்கு கருப்பு வளையல் என்பது பொருளாகும்.   ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.  பலிபீடம் கண்டறியப்பட்டுள்ளது. உழவு செய்யப்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ரூபர் மற்றும் பணவாளி :

 ரூபர் பஞ்சாபிலும் பணவாளி ஹரியானாவிலும் உள்ளது.  வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மிகப்பெரிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

தொலவிரா

  குஜராத் மாகாணத்தில் கண்டறியப்பட்டது.  சிந்து சமவெளி நாகரீகத்தில் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்ட நகரம்  தொலவிரா ஆகும். 

பொருளாதாரம் மற்றும் வேளாண்மை வளர்ச்சி :

        சிந்து சமவெளி நாகரிகம்  ஒரு நகர நாகரிகம் ஆகும்.  இவர்களின் முக்கிய விளைபொருள்கள் நெல், கோதுமை, பார்லி ஆகும்.  

மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர். 

இவர்களது எழுத்துமுறை சித்திர எழுத்து முறையாகும். எழுதும்போது வலமிருந்து இடமாகவும் பின்பு இடமிருந்து வலமாகவும் எழுதினர்.  

சிந்து சமவெளி மக்களின் எழுத்தும் மொழியும் தமிழ் என்று கூறியவர் ஈராஸ் பாதிரியார் ஆவார். சிந்து மக்கள் பேசிய மொழி திராவிட மொழி என்று கருதியவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். 

முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.  நாகரிகம் என்னும் சொல் சிவிஸ் என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது.  சிவிஸ் என்றால் நகரம் என்பது பொருளாகும்.  

சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு பிக்டோகிராப் என்று பெயர்.  இது எகிப்து ஹைரோகுளிபிக் மற்றும் சுமேரியர் க்யுனிபார்ம் எழுத்துக்கள் கலந்தது ஆகும்.  ஒற்றைக்கொம்பு உடைய எழுத்து உடைய முத்திரை காணப்பட்டது.  முத்திரைகளில் காளையின் உருவமும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகிறது. இவர்கள் முத்திரைகளை வியாபாரத்திற்காக பயன்படுத்தினர்.  இவர்கள் பசுபதி என்ற சிவனையும் பெண் கடவுளையும் வழிபட்டனர. சமய வழிபாட்டில் சின்னமாக அரசமரம் விளங்கியது. சுட்ட மட்பாண்டங்களில் உருவ சிலை செய்யும் தொழில் டெரகோட்டா கலை என அழைக்கப்பட்டது. பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்தனர் .

உலகில் வேளாண்மையும் விலங்கு வளர்ப்பும் மிக முன்பே தொடங்கிவிட்ட பகுதிகளில் சிந்து பகுதியில் மற்றொரு பகுதியும் ஒன்று ஆகும் . ஹரப்பா மக்கள் வேளாண்மையை முக்கியமாக கருதினர்.   இரட்டை பயிரிடல் முறையை பின்பற்றினார்கள். மேய்ச்சலும் முக்கிய தொழிலாக இருந்தது.   பயன்பாட்டில் நாய், பன்றி, யானை  ஆகிய விலங்குகள் இருந்தன.  ஆனால் குதிரை இல்லை.  ஹரப்பாவில் மாடுகள் செபு என அழைக்கப்பட்டன .  கைவினைப்பொருட்கள் தயாரிப்பு முக்கிய பங்கு வகித்தது.

சிந்து சமவெளி நாகரிகத்தில் சில பொருள்கள் சில நகரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியது.  உதாரணமாக சங்கு நாகேஸ்வரம், பாலக்கோடு பகுதிகளிலும், வைடூரியம் ஷார்டுகை (ஆப்கானிஸ்தான் ) பகுதியிலும், கார்னிலியன்(மணி) லோத்தல் பகுதியிலும், ஸ்டீட்டைட் என்னும்  நுரைக்கல் தெற்கு ராஜஸ்தான்  பகுதியிலும், செம்பு ராஜஸ்தான், ஓமன் ஆகிய பகுதிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கின.  மட்பாண்டங்களில் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும். பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் மக்கள் ரோரிசெர்ட் எனப்படும் படிககல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினர். செம்பின் பயனை அறிந்திருந்தனர், ஆனால்  இரும்பின் பயனை அறியவில்லை. அணிகலன்கள் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மெசபடோமியாவிற்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிக தொடர்புகளை குறிக்கும் கல்வெட்டு க்யூனிபார்ம் கல்வெட்டு ஆகும். இதில் காணப்படும் மெலுக்கா என்னும் சொல் சிந்து பகுதியை குறிக்கிறது.   ஹரப்பா மக்கள் இரும எண் கொண்ட எடைக்கல் முறையை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 


இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கலின் பகுதிகள் அரிக்கமேடு, கீழடி, உறையூர் போன்றவை ஆகும். நிலத்தை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை பயன்படுத்தி உள்ளனர்.  சிந்து சமவெளி மக்கள் தொல் பொருட்களை கண்டறிய ரேடார் கருவியை பயன்படுத்தியுள்ளனர்.  

சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட அரசன் நாரம்சின் என்பவர் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன்கள் வாங்கியதாக குறிப்பை எழுதியுள்ளார். சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்புநிற மணிகளையே பயன்படுத்தினர். சக்கரத்தின் பயனை அவர்கள் அறிந்திருந்தனர்.  


சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். 


சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி :

        சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட இரண்டு வகையான காரணங்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவை 1. இயற்கை காரணிகளின் மாற்றம் 2. அந்நியப்படையெடுப்பு 

    கி.மு 1800 அளவில் இப்பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும், சிந்துவெளிப் பண்பாடு மறைந்துவிடவில்லை. இப்பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. 

   சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.  சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காக்கர் ஹக்ரா ஆற்றின்  முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

   ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்துகுஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப்பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக்கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக்கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர், இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை.  சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.


சிந்து சமவெளியின் பொருளாதாரம் - நாகரிகத்தின் வீழ்ச்சி பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Featured Post

TNPSC | குடியரசுத்துணை தலைவர் |Vice President of India | இந்திய அரசியலமைப்பு | Indian Constitution |

அமெரிக்க அரசமைப்பினைப்  போன்று இந்திய அரசமைப்பும் துணை குடியரசு தலைவர் பதவியை (இந்திய அரசமைப்பு பிரிவு 63 வழங்குகிறது.     இந்தியாவின் துணை ...

Popular Posts

1

2

3

 
Template Design by Creating Website Published by Mas Template