தியோபந்த் இயக்கம்
இவ்வியக்கம் ஒரு மீட்பு இயக்கம் ஆகும். பழமைவாத முஸ்லிம் உலேமாக்களால் இரு முக்கிய குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்டது ஆகும். குர்ஆன் மற்றும் ஷரீயத்தின் உண்மையான போதனைகளை பரப்புரை செய்தல், இஸ்லாமிய அல்லாத அயல் கூறுகளுக்கு எதிராக புனிதப் போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல் போன்றவை இவ்வியக்கத்தின் குறிக்கோள்களாகும். இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானாதேவி, ரஷீத் அகமது கங்கோத்திரி ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரபிரதேசத்தில் சஹரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியின் பாடத்திட்டம் ஆங்கிலக் கல்வியையும் மேலைநாட்டு பண்பாட்டையும் புறக்கணித்தது. உண்மையான இஸ்லாமிய மதம் இப்பள்ளியில் கற்றுத் தரப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாக அமைந்தது.
தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசு பணிகளுக்கு தயார் செய்யவில்லை, மாறாக மதப் பரப்புரை பரப்ப தயார் செய்தது. அரசியல் களத்தில் தியோபந்த் பள்ளி 1885 இல் அகில இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதை வரவேற்றது. 1888ல் தியோபந்த் உலேமா, சையத் அகமத் கானுடைய அமைப்புகளான யுனைட்டட் பேட்டரியாட்டிக் அசோசியேஷன் , முகமது ஆங்கிலோ ஓரியண்டல் அசோசியேஷன் ஆகியவற்றிற்கு எதிராக சமய ஆணையை பிறப்பித்தது. மௌலானா முகமத் -உல்- ஹசன் தியோபந்த் அமைப்பின் புதிய தலைவரானார். அவரின் தலைமையில் இயங்கிய ஜமைத்-உல்-உலேமா எனப்படும் இறையியலாளர்களின் அவை ஹசனுடைய கருத்துக்களான, இந்திய ஒற்றுமை எனும் ஒட்டுமொத்த சூழலில் முஸ்லிம்களின் அரசியல் சமய உரிமைகளின் பாதுகாப்பு என்பது குறித்தான உறுதியான வடிவத்தை முன்வைத்தது.