Ads Area

பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்

இயக்கத்தின் பெயர்: பிரம்ம சமாஜம்
தோற்றுவித்தவர்: இராஜாராம் மோகன் ராய்

இராஜாராம் மோகன் ராய்

பிரம்ம சபையை நிறுவிய இராஜாராம் மோகன் ராய்  வங்காளத்தில் செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். மேலைநாட்டு கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்தப் பணிகளை முன்னெடுத்த தொடக்ககால சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ராஜாராம் மோகன்ராய் . தனது தாய்மொழியான வங்காளத்தில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம் அரபி பாரசீகம் ஹீப்ரு ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் . ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் 1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் .  

செயல்பாடு:

கல்கத்தாவில் உள்ள இடுகாடுகளுக்கு சென்று விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் . இதன் விளைவாக 1829 ஆம் ஆண்டு தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்து சட்டம் இயற்றினார். இந்த சட்டம் இயற்றியதில்  ராஜா ராம் மோகன் ராய் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.  விதவைப் பெண்கள் மறுமணம் செய்வதை முன்வைத்து, ஆதரித்துப் போற்றினார். குழந்தை திருமணம் , பலதாரமணம் ஆகியவற்றை எதிர்த்து ஒழித்துகட்ட பாடுபட்டவர் . பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று ஆதரித்தவர் ராஜாராம் மோகன்ராய் .

எழுதிய நூல்கள்: 

இவர் வங்காளம், இந்தி ,சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார் .இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்கள் இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள் , அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி போன்றவைகளாகும். இவர் ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களை பின்பற்றினார் .  

மறைவு:

முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை உயர்த்தி பெற இங்கிலாந்து சென்றார் . இவர் 1833ஆம் ஆண்டு பிரிஸ்டல் எனுமிடத்தில் இயற்கை எய்தினார் .இவருக்கு ராஜா என்ற பட்டத்தை முகலாய மன்னர் வழங்கினார். ராஜாராம் மோகன்ராய் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுகிறார்.  


பிரம்ம சமாஜம்

1815 ஆம் ஆண்டு ஆத்மிய சபாவை தோற்றுவித்தார். இந்த ஆத்மிய சபா பின்னர் 1828 முதல் பிரம்ம சபையாக வளர்ந்தது . 

 தேவேந்திரநாத் தாகூர்

ராஜாராம் மோகன்ராய் மறைவிற்கு பிறகு இவரது பணிகளை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான தேவேந்திரநாத் தாகூர் தொடர்ந்தார். பிரம்ம சபையை சமாஜமாஜ மாற்றியவர் தேவேந்திரநாத் தாகூர். இவரின் காலம் 1817 முதல் 1905 ஆகும் . தேவேந்திரநாத் தாகூர் அவர்கள் நம்பிக்கை பற்றிய 4 கொள்கை கூறுகளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேவேந்திரநாத் தாகூர் மிதவாத சீர்திருத்தவாதியாக செயல்பட்டார்.உருவ வழிபாட்டை எதிர்த்த தாகூர் உபநிடதங்களை ஏற்றுக்கொண்டார்.அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவ கருத்துகள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.   

கேசப் சந்திர சென்

தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884). ஆங்கிலக் கல்வி பயின்ற இவரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக கிறித்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டு கிறித்துவத்தை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயற்சி செய்தார். இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.

சாதாரண பிரம்ம சமாஜம்

கேசவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்த பிறகு அவரது கருத்துக்கள் பல மாறின. சமயசமரசம் அவரது முக்கியக் கருத்தாயிற்று. இவையும் பல்வேறு சமய சமரசக் கருத்துக்களும் சேர்ந்து இந்திய பிரம்ம சமாஜம், ’நவவிதானம்’ என்று மாறியது .

குழந்தை திருமணங்களை சமாஜம் கடுமையாக எதிர்த்த காலக்கட்டத்தில் கேசவ சந்திர சென் தனது 14 வயது மகளை இந்திய இளவரசருக்கு திருமணம் செய்து வைத்தார் . இந்த குழந்தை திருமணத்தை எதிர்த்த கேசவ சந்திர சென் அமைப்பின் சக தோழமைகளான விஜய கிருஷ்ண கோஸ்வாமி, சிவாநாத் சாஸ்திரி போன்றோர் விலகி சாதாரண பிரம்ம சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்கள். இவ்வமைப்பு கிறிஸ்தவ அமைப்பிற்கு எதிரான எதிர்ப்பு மனப்பாங்கினை வளர்த்துக் கொண்டது. 

பிரம்ம சமாஜத்தை நன்றாகப் படித்து விட்டீர்களா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை பரிசோதனை செய்யலாமா? இதிலிருந்து 10 வினாக்கள் கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கிறது.. இங்கே க்ளிக் செய்து நமது மாதிரி தேர்வு மையத்திற்கு சென்று தேர்வெழுதிப்  பாருங்கள்..

Bottom Post Ad

Ads Area