Ads Area

அலிகார் இயக்கம் - சையது அகமது கான்

1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும்புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் இந்திய முஸ்லிம்கள் மேற்கத்திய பண்பாட்டை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர் . மேற்கத்திய கல்வி , பண்பாடு,  சிந்தனைகள் போன்றவை தங்கள் மதத்திற்கு ஆபத்தானவை என  இஸ்லாமிய சமூகம் கருதியது.  எனவே முஸ்லிம்களில் ஒரு சிறிய பிரிவினரே மேற்கத்திய கல்வி பயில முன்வந்தனர் . கல்வி, அரசுப்பணிகள், தேசிய அளவில் முதலிடம் வகித்தல் போன்றவற்றை பெற ஆங்கில கல்வியை ஏற்றுக்கொள்வதை விட வேறு வழி இல்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்தனர்.  இவர்களின் புரிதலுக்கு உயிரும் உணர்வும் தந்தவர் சர் சையது அகமது கான்.


சர் சையது அகமது கான் அவர்கள் அக்டோபர் 17, 1817 அன்று பிறந்தார்.  இவர்  இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர் ஆவார்.  இந்தியத் தலைநகர் புது தில்லியில் பிறந்த இவர் வீட்டிலிருந்தபடியே கல்வி கற்றார். யுனானி மருத்துவமுறையான “திப்” கல்வியைக் கற்றுக் கொண்ட இவர் 1841 ல் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார். 1839 ஆம் ஆண்டில் ஆக்ராவில் முன்சீப் நியமனம் பெற்று நீதித்துறைப் பணியைத் தொடங்கினார்.  1855 ஆம் ஆண்டில் பிஜ்னார் எனுமிடத்தில் சதர் அமீன் எனும் பதவியில் நியமிக்கப்பட்டார். 1858 ஆம் ஆண்டில் மொராதாபாத் எனுமிடத்தில் “சதர்-அஸ்-சாதர்” எனும் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். 1859 ஆம் ஆண்டில் மொராதாபாத்தில் “பெர்சியன் மதர்சா” எனும் கல்விச்சாலையை நிறுவினார்.  1860 ஆம் ஆண்டில் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட பஞ்ச நிவாரப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டார்.

            1864 ஆம் ஆண்டு காசிப்பூர் என்னுமிடத்தில் சர் சையது அகமது கான் பள்ளியை(டிரான்ஸ்லேசன் சொசைட்டி) நிறுவினார்.  பின்னர் இது அறிவியல் கழகமாக (சயிண்டிபிக் சொசைட்டி ஆஃப் அலிகார்) மாறியது.  இவர் ஆங்கில நூல்களை குறிப்பாக அறிவியல் நூல்களை உருது மொழியில் மொழிபெயர்த்தார்.  இவர் ஆங்கில அரசாங்கத்தில் பணியாற்றிய நீதித்துறை அலுவலர் என்பது குறிப்பிடத்தகுந்தது.  பெண்கள் முகத்திரை அணிவதை  நீக்கவும்,  பெண்கல்வி வளரவும் பாடுபட்டவர். 1870-ஆம் ஆண்டில் இசுலாமியர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த “தேஜிபுல் இலாஹி” எனும் இதழைப் பதிப்பித்து வெளியிட்டார்.

         முஸ்லிம்களிடையே தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்புவதற்காக தாசில்-உத்-அஃலக் என்னும் தினசரிப் பத்திரிகையை நடத்தினார்.  இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் சர் சையது அகமது கான் ஆவார் .  இவர் 1875 ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கில ஓரியண்டல் (MAO) கல்லூரியை நிறுவினார். இக்கல்லூரி அலிகார் இயக்கத்தை மையப்படுத்தி நடைபெற்றதால் இப்பெயர் பெற்றது .  இந்திய முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும். 1878 ஆம் ஆண்டு வைஸ்ராய் சட்டப்பணிக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  1888 ஆம் ஆண்டில் “இந்திய சுதந்திரக் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார்.  1920இல் முகமதிய ஆங்கில ஓரியண்டல் (MAO) கல்லூரி தரம்  உயர்த்தப்பட்டு அலிகார் பல்கலைக்கழகம் ஆனது.  சர் சையது அகமது கான் உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் 27-03-1898 ஆம் நாள் மரணமடைந்தார்.

சர் சையது அகமது கானின் சிறப்புகள் :

       1842 ஆம் ஆண்டில் இவருக்கு “ஜவாத் உத் தௌலா ஆரிஃப் ஜங்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1864 ஆம் ஆண்டில் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஃபெலோசிப் வழங்கப்பட்டது. 1866 ஆம் ஆண்டில் கல்விப்பணிகளுக்காக வஸ்ராயின் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது.1888 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு “கே.சி.எஸ்” மற்றும் “நைட் ஹீட்” எனும் இரு சிறப்புப் பட்டங்களை அளித்தது.1889 ஆம் ஆண்டில் எடின்பரோ பல்கலைக்கழகம் எல்.எல்.டி எனும் சிறப்புப் பட்டம் வழங்கியது. மேலும், “கிலால்” எனும் சிறப்புப் பட்டமும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமும் அளிக்கப்பட்டது. சையது அகமது கான் நவீன இந்தியாவின் சிற்பி என அழைக்கப்படுகிறார்.

Bottom Post Ad

Ads Area