மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ- கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர். குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்ப டுத்தினர்.
மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.
சான்றுகள்
தொல்லியல் சான்றுகள்
கல்வெட்டுகள் / செப்புப் பட்டயங்கள்
தனதேவனின் அயோத்தி கல்வெட்டு
பெர்சிபோலிஸ் நக்ஸி ரஸ்தம் கல்வெட்டு
மோகா (தட்சசீலம் செப்புப்பட்டயம்)
ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு
நாசிக் மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி)
முதலாம் டேரியஸின் கல்வெட்டு
நாணயங்கள்
சாதவாகனரின் நாணயங்கள்
இரண்டாம் கட்பிஸிசின் நாணயங்கள்
ரோமானிய நாணயங்கள்
இலக்கியங்கள்
புராணங்கள்
கார்கி சம்கிதா
பாணபட்டரின் ஹர்ஷ சரிதம்
பதஞ்சலியின் மகாபாஷ்யா
குணாதியாவின் பிரிகஸ்தகதா
நாகார்ஜுனாவின் மத்யமிக சூத்ரா
அஸ்வகோஷரின் புத்த சரிதம்
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்
அயல் நாட்டவர் குறிப்புகள்
சீன பௌத்தத் துறவி யுவான்-சுவாங்கின் பயணக் குறிப்புகள்
வடக்கே சுங்கர்களும் கன்வர்களும்
சுங்கர்கள்
மௌரியப் பேரரசின் கடைசி அரசர் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.
புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது. பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார் ஆனால் மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.
கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார். புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார்.
பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரர் அரச பதவி ஏற்றார். அவர்தான் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார். மேலும் அந்நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.
சுங்க வம்சத்தின் பின்வந்த அரசர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்ததால் இந்தோ-பாக்டீரியர், இந்தோ-பார்த்தியர் ஆகியோரின் தொடர் அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தது. சுங்கவம்சத்தினர் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர். தேவபூதி கடைசி சுங்க அரசராவார். அவர் தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார். வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.
சுங்கர்கள் காலத்தின் முக்கியத்துவம்
பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் சுங்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர். சமஸ்கிருத நாளடைவில் வளர்ச்சியடைந்து மொழி அரசவை மொழியானது.
புஷ்யமித்திரர் பௌத்தர்களைத் துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர் செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டன. சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.
சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.
கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
கன்வர்கள்
கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குப்தர்களின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.
கன்வ அரசர்கள்
வாசுதேவர்
பூமிமித்ரர்
நாராயணர்
சுசர்மன்
கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார். சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.