எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » முகலாயப் பேரரசு தோற்றம் - சூர் வம்சம் தோற்றம் - ஆட்சிமுறை

முகலாயப் பேரரசு தோற்றம் - சூர் வம்சம் தோற்றம் - ஆட்சிமுறை

முகலாயப் பேரரசு தோற்றம் - சூர் வம்சம் தோற்றம் - ஆட்சிமுறை

Origin and rule of the Mughal Empire and the Sur dynasty


பாபர் படையெடுப்பின் போது இந்தியாவின் நிலை


   பாபர் படையெடுப்பின் போது இந்தியா பல்வேறு சிற்றரசுகளாக துண்டாக்கப்பட்டு சண்டை சச்சரவுடன் காணப்பட்டது. வடஇந்திய அரசியலில் ஒற்றுமையில்லை. டெல்லி சுல்தானிய பேரரசு வலிமை இழந்து காணப்பட்டது. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி, பிரபுக்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இராஜபுத்திரர்களின் தலைவரான இராணாசங்கா அதிக வலிமை பெற்று விளங்கியதோடு டெல்லியைக் கைப்பற்றும் ஆர்வத்துடன் காணப்பட்டார். இச்சமயத்தில் பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி ஆலம்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடியிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது.


    தென்னிந்தியாவில் விசயநகரப் பேரரசும், பாமினி பேரரசும் சுதந்திர அரசுகளாக செயல்பட்டு வந்தன.ஆனால் இவை தங்களிடையே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்.


பாபர்(கி.பி.1526-கி.பி.1530)


     ஜாகிருதின் முகம்மது பாபர் கி.பி. 1483ஆம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தந்தையின் வழியில் இவர் துருக்கியைச் சார்ந்த தைமூர் இனத்தையும், தாய் வழியில் மங்கோலிய இனத்தைச் சார்ந்த செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார். கி.பி. 1494 ஆம் ஆண்டு தனது தந்தை மறைவிற்குப் பிறகு தனது 11 ஆம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.


படையெடுப்புகள்


முதல் பானிபட் போர் (கி.பி. 1526)


பஞ்சாபின் ஆளுநரான தௌலத் கான் லோடியின் வேண்டுகோளை ஏற்று பாபர் இந்தியாவிற்கு எதிராக படையெடுப்பை மேற்கொண்டார். கி.பி.1526ஆம் ஆண்டு ஏப்ரல்21ஆம் நாள் வரலாற்றுப் புகழ்மிக்க பானிப்பட் போர்க்களத்தில் டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார். பாபரின் பீரங்கிப்படை இப்போரில் முக்கிய பங்கு வகித்தது. இப்ராஹிம் லோடியைவிட குறைவான படைவீரர்களைக் கொண்டிருந்த பாபர் மிக சுலபமாக இப்போரில் வெற்றி பெற்றார். இப்ராஹிம் லோடி கொல்லப்பட்டார். டெல்லி சுல்தானியரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. முகலாயப் பேரரசிற்கான அடித்தளத்தை பாபர் இந்தியாவில் உருவாக்கினார்.


பானிப்பட் போரில் பாபர் வெற்றி பெற்றாலும் மேவாரை ஆட்சி செய்த இராஜபுத்திர மன்னர் ராணாசங்கா பாபருக்கு பெரும் சவாலாக அமைந்தார். கி.பி. 1527ஆம் ஆண்டு கான்வா போர்க்களத்தில் பாபர் அரும்பாடுபட்டு ராணாசங்காவை வெற்றி கொண்டார். 


பிறகு கி.பி. 1528 ஆம் ஆண்டு சந்தேரி போரில் மாளவத்தை ஆட்சி செய்த மேதினிராய் என்ற மன்னரை வெற்றி கொண்டார். கடைசியாக கி.பி.1529ஆம் ஆண்டு காக்ரா போரில், முகம்மது லோடியைத் தோற்கடித்து, முகலாயப் பேரரசினை இந்தியாவில் நிலைநாட்டினார். இவரது பேரரசு கிழக்கே பீகார் முதல் மேற்கே பஞ்சாப், காபூல், காந்தகார் மற்றும் பதக்க்ஷான் வரை பரவியிருந்தது. ஆனால் எதிர் பாராதவிதமாக தனது 47 வது வயதில் நோயுற்ற பாபர், கி.பி. 1530 ஆம் ஆண்டு தனது மகன் உமாயூனை தனது வாரிசாக நியமனம் செய்த பின்பு காலமானார்.

வரலாற்றில் பாபர்


இடைக்கால இந்தியாவில் பாபர் மிகவும் விரும்பத்தக்கவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் சிறந்த போர் வீரராகவும், அறிஞராகவும், கவிஞராகவும் விளங்கினார். தன் சுயசரிதையை துருக்கிய மொழியில் எழுதியுள்ளார். இது “துசுக்-கி-பாபரி' அல்லது "பாபரின் நினைவுகள்” என்று அழைக்கப்படுகிறது. பாபர் தனது காலக்கட்டத்திலிருந்த ஆசிய அரசர்களில் சிறந்த அறிவுக்கூர்மை உடையவராவார். 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசிற்கு அடித்தளமிட்டவர் பாபரென்றால் அது மிகையாகாது.

உமாயூன் (கி.பி. 1530-1540, 1555-1556)

பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் கி.பி.1530 ஆம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார். கி.பி.1508ஆம் ஆண்டு காபூலில் பிறந்த இவர் தனது 20ஆம் வயதில் பதக்ஷானில் ஆளுநராக நியமிக்கப்பட்டார். காம்ரான், அஸ்காரி, ஹிண்டால் ஆகியவர்கள் இவரின் சகோதரர்கள் ஆவார்கள்.


பாபரின் மறைவினைத் தொடர்ந்து ஆட்சி பொறுப்பை ஏற்ற உமாயூன், அரியணை மலர்படுக்கை அல்ல என்பதை உணர்ந்தார். பாபருக்கு பேரரசை பலப்படுத்த போதிய நேரமில்லை. நாட்டில் முறையான வாரிசுரிமை சட்டமும் இல்லை. இதனால் யாபரின் மரணத்தைத் தொடர்ந்து  வாரிசுரிமைப் போர் தொடங்கியது. உமாயூனின் உடன் பிறந்தவர்கள் டெல்லியின் அரியணையைக் கைப்பற்ற ஆர்வம் காட்டினார். இராஜபுத்திரர்களும் மொகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட எண்ணினர். குஜராத்தைச் சார்ந்த சில பிரபுக்களும் உமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். வங்காளம் மற்றும் பீகாரைச் சார்ந்த ஷெர்கான் உமாயூனுக்கு மாபெரும் எதிர்ப்பாளராக விளங்கினார். இவ்வாறு உமாயூன் அனைத்து புறங்களிலும் பகைவர்களால் சூழ்ந்து காணப்பட்டார்.

கி.பி. 1539ஆம் ஆண்டு சௌசா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்கானிடம் உமாயூன் தோல்வியுற்றார். மீண்டும் கி.பி.1540ஆம் ஆண்டு கன்னோசிப் போரிலும் தோல்வி அடைந்தார். அரியணையை இழந்து உமாயூன் பதினைந்து ஆண்டுகள் நாடோடியாக வாழ்ந்தார். இதற்கிடையில் உமாயூன் அமிதாபானு பேகத்தை திருமணம் செய்து கொண்டார்.

கி.பி.1542-ம் ஆண்டு அமரக்கோட்டை என்ற இடத்தில் அக்பர் பிறந்தார். பிறகு பாரசீக மன்னரின் துணையோடு உமாயூன் காம்ரானிடம் இருந்து காபூல், காந்தகாரை திரும்பப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கி.பி.1555-ம் ஆண்டு டெல்லி மற்றும் ஆக்ராவை மீண்டும் கைப்பற்றி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசரானார்.

உமாயூன் என்றால் "அதிர்ஷ்டசாலி" ஆனால் இவர் "அதிர்ஷ்டமில்லா" பாபரின் மகனாக விளங்கினார். இவர் ஒரு அரசராக படுதோல்வி அடைந்தார். கீழே விழுவதற்கு ஒரு வாய்ப்பு வருமேயானால் அதை தவறவிடும் மனிதர் உமாயூன் அல்ல. வரலாற்று அறிஞர் லேன்பூலின் கூற்றுப்படி உமாயூன் வாழ்க்கை முழுவதும் தடுமாறினார். இறுதியில் கி.பி.1556ஆம் ஆண்டு உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது மகன் அக்பரை தனது வாரிசாக நியமனம் செய்தார். பைராம்கானை அக்பரின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

ஷெர்ஷா சூர் (கி.பி.1540-1545)

ஷெர்ஷாவின் உண்மையான பெயர் ஃபரித் ஆகும். இவர் உஷேன் என்பவரின் மகன் ஆவார். கி.பி.1472ஆம் ஆண்டு ஃபரித் பிறந்தார். ஜோன்பூரை ஆட்சி செய்த ஆப்கானிய கவர்னரிடம் இவர் வேலைக்கு சேர்ந்தார். அவரே இவருக்கு ஷெர்கான் என்ற பட்டத்தினை வழங்கினார். பிறகு வங்காள ஆளுநரிடம் பணிக்கு சேர்ந்தார். பின்னர் பீகாரின் அரசரானார். தன்னை "ஷெர்ஷா'' என அழைத்துக்கொண்டார். இவரால் நிறுவப்பட்ட பேரரசு "சூர்" வம்சம் என அழைக்கப்பட்டது.

ஷெர்ஷாவின் வெற்றிகள்

 
கி.பி.1539ஆம் ஆண்டு “சௌசா”என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்ஷா உமாயூனை தோற்கடித்தார்.


இவ்வெற்றிக்குப் பிறகு டெல்லியைக் கைப்பற்ற கனவு கண்டார். தன்னை வங்காளம் மற்றும் பீகாரின் மன்னராக அறிவித்துக்கொண்டார். கி.பி.1540 ஆம் ஆண்டு கன்னோசிப் போரில் மீண்டும் உமாயூனை வெற்றி கொண்டு டெல்லி மற்றும் ஆக்ராவை கைப்பற்றி தன்னை அரசராக அறிவித்துக் கொண்டார். பிறகு சிந்து மற்றும் முல்தானை கைப்பற்றினார். மாளவம், ரெய்சின் மற்றும் மார்வார் ஆகிய பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். கி.பி.1545ஆம் ஆண்டு பண்டேல்கண்டை ஆட்சி செய்த அரசருக்கெதிராக தனது கடைசி படையெடுப்பை மேற்கொண்டார். கலிஞ்சார் கோட்டை முற்றுகையின் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில் கி.பி.1545ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஷெர்ஷாவின் நிர்வாகம் மைய நிர்வாகம்

ஷெர்ஷா தலைசிறந்த நிர்வாக முறையை ஏற்படுத்திய ஒரு சிற்பி ஆவார். இவர் வல்லாட்சியாளராக விளங்கியதோடு மட்டுமின்றி அறிவுபூர்வமானவராகவும் விளங்கினார். முஸ்லீம் மதத் தலைவர்களின் (உலேமாக்கள்) ஆலோசனைகளைக் கேட்க மறுத்தார். நிர்வாகத்தின் சிறு விவகாரங்களையும் தானே நேரடியாகக் கவனித்தார். இவருக்கு உதவியாக அமைச்சரவைக் குழு ஒன்று செயல் பட்டது. இவரது அமைச்சரவையில் நான்கு முக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள்,


திவானி-இ-விசாரத்-வரவு மற்றும் செலவு பொறுப்பாளர்

திவானி-இ -ஆரிஷ்-இராணுவ

பொறுப்பாளர் திவானி–இ–ரசாலத் வெளியுறவு மற்றும் தூதரகப் பொறுப்பாளர்

திவானி-இ-இன்ஷா-அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவரத்து பொறுப்பாளர்.


மாநில நிர்வாகம்

 
ஷெர்ஷா நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு பேரரசை பல சர்க்கார்களாகப் பிரித்தார். சர்க்கார்கள் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பர்கானாவும் பல கிராமங்களைக் கொண்டிருந்தன. கிராமமே மாநில நிர்வாகத்தின் கடைசி அங்கமாக விளங்கியது.

வருவாய் நிர்வாகம்

ஷெர்ஷாவின் நில வருவாய் நிர்வாகத்தில் முக்கியமான இடத்தைப் பெற்று விளங்கியது. நிலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு நிலத்தின் தரத்திற்கேற்ப வரி நிர்ணயம் செய்யப்பட்டது. நிலவரி முக்கிய ய வருவாயாக இருந்தது. ஷெர்ஷா இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார் . விவசாயிகளுக்கு "நில உரிமை" குறித்து பட்டா வழங்கப்பட்டது. அரசின் பங்கு விளைச்சலில் மூன்றில் ஒரு பகுதியாக (1/3) நிர்ணயம் செய்யப் பட்டது. ஷெர்ஷாவின் நில சீர்திருத்தத்தை மாமன்னர் அக்பர் பிற்காலத்தில் பின்பற்றினார். எனவே ஷெர்ஷா "அக்பரின் முன்னோடி” என அழைக்கப்படுகிறார்.

இராணுவ நிர்வாகம்

ஷெர்ஷா ஒரு சிறந்த போர் வீரராக மட்டுமின்றி சிறந்த இராணுவ தளபதியாகவும் விளங்கினார். இவர் அலாவுதின் கில்ஜி பின்பற்றிய இராணுவ முறையின் முக்கிய அம்சங்களை பின்பற்றினார். இவர் தலைசிறந்த இராணுவத்தைப் பெற்றிருந்தார். இவரது ராணுவம் காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை மற்றும் யானைப்படையைக் கொண்டிருந்தது. ஆனால் குதிரைப் படை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் பட்டது. ஆப்கானிய போர் வீரர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர். குதிரைப் படையில் குதிரைகளுக்குச் சூடுபோடும் (தாக்) முறையை அறிமுகப்படுத்தினார். காலாட்படையில் வீரர்கள் பற்றிய பதிவேட்டினை பராமரித்தார். இவற்றின் மூலம் இராணுவத்தில் தவறுகள் நிகழ்வது அகற்றப்பட்டன.

நீதி நிர்வாகம்

ஷெர்ஷா நீதியின் ஊற்றா விளங்கினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார். இவரே மேல் விளங்கினார். முறையீட்டு நீதிமன்றமாக அனைத்து மேல் முறையீட்டு வழக்குகளையும் விசாரித்தார். ஷெர்ஷாவிற்கு நீதி நிர்வாகத்தில் தலைமைக் காஜி உதவி புரிந்தார். குற்றம் புரிந்தவர் யாராயினும் எந்தப் பதவி வகித்தாலும் தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது.

பிற சீர்திருத்தங்கள் ஒற்றர்படை


ஷெர்ஷாவின் ஆட்சி காலத்தில் ஒற்றர் முறை திருத்தி அமைக்கப்பட்டது. பேரரசின் அனைத்து பகுதிகளிலும் இரகசிய ஒற்றர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து செய்திகளும் அரசுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது.

சாலைகள்

ஷெர்ஷா பழைய சாலைகளை புதுப்பித்து, புது சாலைகளை அமைப்பதில் தனி கவனம் செலுத்தினார். இவரது ஆட்சி காலத்தில் நான்கு முக்கியமான சாலைகள் நாட்டின் எல்லைகளில் இருந்து பேரரசுடன் இணைக்கப்பட்டன. சாலைகளின் இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு போக்குவரத்தை மேம்படுத்தினார். ஆங்காங்கே இளைப்பா று ம் விடுதிகளையும் அமைத்தார். இவர் செய்தித்தொடர்பு முறையினைமேம்படுத்தினார்.

நாணயச் சீர்திருத்தம்


ஷெர்ஷா புழக்கத்திலிருந்த பழைய மற்றும் கலப்பு நாணயங்களை ரத்து செய்தார். வெள்ளி மற்றும் செப்பு நாணயங்களுக்கு ஒப்பீட்டு விகிதாசாரத்தை நிர்ணயம் செய்தார். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டார். நாணயங்களில் தனது பெயரினை தேவநகிரி எழுத்தில் பொறிக்கச் செய்தார். இவரது நாணயச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தியது. எனவே ஷெர்ஷா "நவீன நாணய முறையின் தந்தை" என்றழைக்கப்படுகிறார். இவரின் ஆட்சி காலத்தில் பொருளாதார நிலை மேம்பாடடைந்தது.

மதிப்பீடு

ஷெர்ஷா ஒரு மாபெரும் பேரரசை உருவாக்கியவராகவும் சிறந்த நிர்வாகியாகவும் கருதப்படுகிறார். இவர் கலை, கட்டடக்கலையிலும் சிறந்து விளங்கினார். பீகாரிலுள்ள "சசாரம்' நகரில் தனது கல்லறையை இந்திய இஸ்லாமிய கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கினார். டெல்லியில் புகழ் பெற்ற “புராணாகிலா என்ற சிறந்த கட்டடத்தை உருவாக்கினார். ஷெர்ஷா மேலும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் மொகலாயர்கள் தங்கள் ஆட்சியை மீண்டும் இந்தியாவில் ஏற்படுத்தியிருக்க முடியாது..

 

 

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template