தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார்.
1950 களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார்.
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது.
எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தவர்.
பெருஞ்சித்திரனார் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர்.
அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார். ஐயை , திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகியவை புகழ்பெற்ற ஆக்கங்களாகும்.
பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார்.
இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
1959 இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் இதழை 1959 இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார்.
தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.
எழுதிய நூல்கள்:
இளமை உணர்வுகள்
இளமை விடியல்
உலகியல் நூறு
எண் சுவை எண்பது
ஐயை (பாவியம்)
ஓ! ஓ! தமிழர்களே
கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்
கழுதை அழுத கதை
கனிச்சாறு (எட்டு பாடற்தொகுதிகள்)
கொய்யாக் கனி (பாவியம்)
சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்
சாதி ஒழிப்பு
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழீழம்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
நூறாசிரியம்
நெருப்பாற்றில் எதிர் நீச்சல்
பள்ளிப் பறவைகள்
பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
பாவியக் கொத்து (இரண்டு தொகுதி)
பாவேந்தர் பாரதிதாசன்
பெரியார்
மகபுகுவஞ்சி
மொழி ஞாயிறு பாவாணர்
வாழ்வியல் முப்பது
வேண்டும் விடுதலை