எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , , » TNPSC | விஜயநகர பேரரசு | Vijayanagara Empire | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு

TNPSC | விஜயநகர பேரரசு | Vijayanagara Empire | Indian medieval History | இடைக்கால இந்திய வரலாறு


விஜயநகர, பாமினி அரசுகளின் எழுச்சி
 


முகமது பின் துக்ளக் ஆட்சிக்குப் பிறகு டெல்லி சுல்தானிய வீழ்ச்சியினால் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் ஏராளமான மாகான ஆளுநர்களும், திரை செலுத்தும் குறுநில அரசர்களும் சுதந்தர அரசுகளை அமைத்து ஆள முற்பட்டனர்.
 
டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து முதலில் வங்காளமும், முல்தானும் வெளியேறின. தொடர்ந்து, குஜராத், மேவார், மாளவம், மார்வார், காஷ்மீர் ஆகியன தமது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டன.

இதன் தொடர்ச்சியாகத் தக்காணம் மற்றும் தென் இந்தியாவிலும் விஜயநகரம், பாமினி பேரரசு ஆகிய இரு பெரும் அரசுகள் எழுந்ததோடு அரசியல் முக்கியத்துவமும் அவை பெற்றன. 

விஜயநகரப் பேரரசு (கி.பி.1336-1672) 

ஹொய்சாள அரசர் மூன்றாம் வீர பல்லாளரிடம் ஹரிகரர், புக்கர் ஆகியோர் பணியாற்றினார்கள். 
 
முகமது பின் துக்ளக்கினால் ஹொய்சாள மரபு வீழ்ச்சியடைந்த பிறகு,ஹரிகரர் மற்றும் புக்கர் துறவி வித்யாரண்யர் மற்றும் அவரது சகோதரர் சாயனா உதவியுடன் கி.பி.1336 இல் துங்கபத்ரா ஆற்றின் தென்கரையில் விஜய நகர அரசினை உருவாக்கினர். 
 
இதன் தலைநகரம் ஹம்பியாகும்.
 
பேரரசின் 4 மரபுகள்

சங்கம (1336-1485), 
சாளுவ (1485-1505), 
துளுவ (1505-1570), 
அரவீடு (1570-1650) 
 
எனும் நான்கு முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது.

கி.பி. 1336 இல் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலாம் ஹரிகரர், முதலாவதாக  மைசூரையும், பின்னர் மதுரையையும் வென்றார். அவரைத் தொடர்ந்து முதலாம் புக்கர் (கி.பி. 1356 ) ஆட்சிக்கு வந்தார்.

வரலாற்றறிஞர்கள் ஹரிஹரர், புக்கர் தொடங்கிய இவ்வரச வம்சத்தை அவரின் தந்தையாரின் பெயரில் அல்லது மூதாதையரின் பெயரில சங்கம வம்சம் என அழைத்தனர்.  
 
இவரது காலத்தில் பேரரசின் பரப்பானது துங்கபத்ரா ஆறு முதல், தெற்கில் இராமேஸ்வரம் வரையில் விரிவடைந்தது. விஜயநகரப் பேரரசின் சிறப்புக்குரிய மன்னர்கள், இரண்டாம் ஹரிஹரர், முதலாம் தேவராயர், இரண்டாம் தேவராயர், கிருஷ்ண தேவராயர் ஆகியோராவார்.

கிருஷ்ணதேவராயர் (1509-1529)

துளுவ மரபைச் சேர்ந்தவர் கிருஷ்ண தேவராயர். 
 
இவர் விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவராவார். 'கிருஷ்ண தேவராயர் முழு நிறைவான அரசர்' என்று வரலாற்று அறிஞர் டோமிங்கோ பயஸ் குறிப்பிட்டுள்ளார். 
 
தனது தந்தையும் அண்ணனும் அமைத்துக் கொடுத்த வலுவான ராணுவ அடித்தளத்தின் மீது அவர் ஒரு பேரரசைக் கட்டினார். தனது நாட்டின் பெருமைக்குக்கு குறை ஏற்படாமலிருக்கப் பல படையெடுப்புகளை மேற்கொண்டார். 
 
தனது ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தார். 
 
இதனைத் தொடர்ந்து அவர் இரு முனைகளில் போரிட வேண்டியிருந்தது. ஒன்று பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்களுடன், மற்றொன்று ஒரிசாவின் கஜபதி அரசர்களுடன். 
 
அவருடைய கிழக்குத்திசை படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் பல கல்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன. முடிவில் அவர் தனது வெற்றித் தூணை சிம்மாச்சலத்தில் நிறுவினார்.

கிருஷ்ணதேவராயர் மிகச்சிறந்த நிர்வாகத் திறமை உடையவர். நீர்ப் பாசன வசதிக்காகப் பெரிய ஏரிகளையும், வாய்க்கால்களையும் ஏற்படுத்தினார். அயல்நாட்டு வணிகத்தின் சிறப்பை உணர்ந்த இவர் கப்பல் கட்டுமானத்தையும் மேம்படுத்தினார். போர்ச்சுக்கீசிய, அரேபிய வணிகக் குழுவினரை நட்புறவோடு நடத்தி, நாட்டின் வருவாயைப் பெருக்கினார்.

கிருஷ்ணதேவராயர் சிறந்த கல்விமான் ஆவார். இவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். கட்டடங்களைக் கட்டுவதிலும் கலைகளை வளர்ப்பதிலும் இம்மன்னர் ஆர்வம் கொண்டிருந்தார். அழகிய ஆலயங்கள் பலவற்றையும், அரண்மனைகளையும் எழிலுறக் கட்டினார். இவரது காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்ச நிலையை அடைந்தது.
 
கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசின் மகத்தான அரசர் எனப்போற்றப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. 
 
ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார். 
 
விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான பெர்னாவா நூனிஸ், டோமிங்கோ பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர் நிலை, செல்வச் செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர். 
 
அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா போன்ற அவருடைய தலைசிறந்த புலவர்கள் அலங்கரித்தனர். கிருஷ்ண தேவராயரே பெரும் அறிஞராக கருதப்படுகிறார்.

படையெடுப்புகள் :

கிருஷ்ணதேவராயர் மாபெரும் வீரராவார். 
 
இவர் கி.பி. 1510 இல் சிவசமுத்திரத்தையும், கி.பி. 1512 இல் ரெய்ச்சூரையும், கி.பி. 1523 இல் வாரங்கலையும், ஒடிசாவையும் வென்றார். மேலும் தக்காணத்தின் பெரும் பகுதியையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். 
 
வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே காவிரி வரையிலும், மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்கக்கடல் வரையிலுமாகப் பரந்த பேரரசை நிறுவினார்.

தலைக்கோட்டை போர் (கி.பி. 1565) - காணொலி விளக்கம் காண


கிருஷ்ணதேவராயருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்தனர். இராமராயர் ஆட்சியின் போது, பாமினி அரசுகளான, அகமதுநகர், பீஜப்பூர், கோல்கொண்டா, பீடார் ஆகிய முஸ்லீம் நாடுகள் கூட்டாக விஜயநகர் மீது படையெடுத்தன. 
 
கி. பி. 1565 இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும் போரின் போது விஜயநகர மக்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். விஜயநகரம் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்டது. இராமராயர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

நிர்வாகச் சிறப்புகள் மைய, மாகாண, கிராம நிர்வாகம் :

விஜயநகர ஆட்சியாளர்கள் ஒரு சிறந்த கட்டமைப்பு கொண்ட நிர்வாக முறையைப் பின்பற்றினர். நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் அரசர் பெற்றிருந்தார். அவருக்கு உதவிட அமைச்சர்கள் பலர் இருந்தனர்.

பேரரசு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 
 
நாயக் எனப்பட்ட ஆளுநர்கள் மாகாணங்களை நிர்வகித்தனர். மாகாணங்கள் பல மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. 
 
ஒவ்வொரு கிராமமும் 'கிராமசபை' என்னும் குழுவினரால் ஆளப்பட்டது. 
 
அக்குழுவில் தலைமுறை வழிவந்த, கணக்காளர், எடையாளர், காவல்காரர், குற்றேவலர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 
 
மகாநாயக்கச்சாரியார் என்னும் மைய அரசின் அதிகாரியால் கிராம நிர்வாகங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.

இராணுவம்

படைப்பிரிவில், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, ஆகியன பெரும்பங்கு வகித்தன தளபதியின் நேரடி நிர்வாகத்தில் படைகள் இருந்தன.

நிதித்துறை

நாட்டின் வருவாயானது வேளாண் மையைச் சார்ந்திருந்தது. நிலங்கள் முறையாக அளக்கப்பட்டு அதன் மண் வளத்திற்கேற்ப வரி விதிக்கப்பட்டது. வேளாண்துறை மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு புதிய அணைகளும், வாய்க்கால்களும் ஏற்படுத்தப்பட்டன.

நீதித்துறை

மன்னர், நாட்டின் தலைமை நீதிபதியாகவும் விளங்கினார். வழக்குகள் இந்து நெறிமுறைகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன. குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. நீதிக்குப் புறம்பாக நடப்போரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

பெண்களின் நிலை

பெண்களின் நிலை மேம்பட்டிருந்தது. அரசியல், சமுதாயம், இலக்கியம் போன்றவற்றில் பங்கு கொண்டனர். ஆயுதமேந்துதல், மல்யுத்தம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் காட்டினர். இசையிலும், நுண்கலைகளிலும் ஈடுபாடு கொண்டிந்தனர். பெண்களில் சிலர் கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்கினர். நியுனஸ் தனது நூலில் பெண் சோதிடர்கள், எழுத்தர், கணக்காளர், காவலர், மல்யுத்த வீராங்கனைகள் ஆகியோர் அரசவையில் இடம் பெற்றிருந்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வாழ்க்கை

மக்களது வாழ்க்கை முறையின் விவரங்களை வெளிநாட்டுப் பயணியர் எழுதிய குறிப்புகளின் மூலமாக நாம் அறிகிறோம். குழந்தைத்திருமணமும், வரதட்சணை முறை, பலதார மணமும், உடன்கட்டை ஏறுதலும் நடைமுறையில் இருந்தன. மன்னர், சமயங்களைப் பின்பற்றுவதில் முழு உரிமையை மக்களுக்குக் கொடுத்தார்.

பொருளாதார நிலை

விஜயநகரப் பேரரசு வளமும் செழுமையும் மிக்கதாக காணப்பட்டது. அரசின் வேளாண்மை சீர்திருத்தங்களால் விளைச்சல் அதிகரித்தது. நெசவு, சுரங்கம், உலோகம், வாசனைதிரவியம் சார்ந்த பல தொழிற்கூடங்கள் இயங்கின. 
 
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள், மலேய தீவுக்கூட்டங்கள், பர்மா, சீனா, அரேபியா, பாரசீகம், தென்னாப்பிரிக்கா, அபிசீனியா மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். 
 
வெளிநாட்டு கப்பல் போக்குவரத்துக்கு, கோவா, டையூ, கொல்லம், கொச்சி, முதலியன முக்கிய துறைமுகங்கள் விளங்கின. 
 
பேரரசில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் வாசனை பொருள்கள், தானியங்கள், பட்டு, பருத்தி, அபின், சாயப் பொருட்கள், முத்து, குங்குமப்பூ. இஞ்சி, சர்க்கரை, தேங்காய், போன்றவை குறிப்பிடத்தக்கவை. 
 
அதேவேளையில் குதிரைகள். பாதரசம், சீனப் பட்டு,மிருதுவான வெல்வெட் துணி, யானைகள் மற்றும் தாமிரம் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

கலை, இலக்கியக் கொடைகள்

விஜயநகர அரசர்கள் இலக்கியத்தின்  சிறந்த புரவலர்களாக இருந்தனர். அரசர்கள் வடமொழி (சமஸ்கிருதம்), தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட இலக்கியங்களையும் மொழிகளையும் ஊக்குவித்தனர். 
 
கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இலக்கியம் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. கலை மற்றும் இலக்கியத்தின் சிறந்த புரவலராக இருந்த அவர், 'ஆந்திர போஜா' என்று அழைக்கப்பட்டார்.

அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த சயானா, வேதங்கள் எழுதினார். அவர் இரண்டாம் ஹரிஹராவின் அமைச்சராக இருந்தார். 
 
மாதவச்சார்யா ஒரு பிரபலமான வடமொழி அறிஞர், அவர் விஜயநகர குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். 
 
புக்கரின் மகன் கம்பனாவின் மனைவியான கங்காதேவி, அக்கால எழுத்தாளர்களில் மிகச் சிறந்தவர். அவர் தனது புகழ்பெற்ற படைப்பான மதுரா விஜயம் எனும் நூலில் தனது கணவர் மதுரையை வென்றதை மகாகாவிய பாணியில் விவரிக்கிறார். 
 
அந்த காலத்தில் பிரபல கவிஞர்கள் ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் ஆவர். ஹன்னம்மா இரண்டாம் தேவராயரின் அவையில் இருந்த ஒரு பெண் செய்தியாளராவார்.

கிருஷ்ணதேவராயர் தமிழ் அறிஞர்களை ஆதரித்தார். சைவ, வைணவ மற்றும் சமண சமய தமிழ் அறிஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். திருமலைநாதரும் அவரது மகன் பரஞ்ஜோதியாரும் அக்காலத்தில் நன்கு அறியப்பட்ட அறிஞர்கள் ஆவர். 
 
சிதம்பர புராணம் மற்றும் சொக்கநாதருலா ஆகியவை திருமலைநாதரால் எழுதப்பட்டன.

நச்சனா சோமநாதா வடமொழி, தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் புலமைபெற்ற அறிஞராக இருந்தார்.

அஷ்டதிக்கஜங்கள் (எட்டு புகழ்பெற்ற கவிஞர்கள்) 
 
அல்லசானி பெத்தண்ணா, 
நந்தி திம்மண்ணா, 
தெனாலிராமன், 
துர்ஜதி, 
பட்டு மூர்த்தி, 
புணவீரபத்ரன், 
மல்லானா 
பனாஜி சூரனா.
 
கலை, கல்வி ஆகியவற்றிற்கு விஜயநகர மன்னர்கள் பெரும் ஆதரவு தந்துள்ளனர். 
 
கோயிற்கட்டுமானக் கலைக்கு, ஹசரா ராமசாமி கோயிலும், விட்டலசாமி ஆலயமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். 
 
உலோக உருக்குக்கலைச் சிறப்பிற்குக் கிருஷ்ணதேவராயர் சிலையே ஒரு மகுடமாகும்.

மன்னர்களால் பல அறிஞர்கள் ஆதரிக்கப்பட்டனர். 
 
சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னட இலக்கியங்கள் வளர்ச்சியடைந்தன. 
 
வேதங்களுக்கான உரையைச் சாயனா எழுதினார். கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் அமுக்த-மால்யதா என்னும் நூலை எழுதினார், 
 
மேலும் அவர் உஷாபரிநயம், ஜாம்பவதி கல்யாணம் ஆகிய சமஸ்கிருத நூல்களையும் எழுதியுள்ளார்.

கட்டடக்கலை :

தூண்களில் உள்ள சிற்பங்கள் தனித்துவமான அம்சங்களுடன் செதுக்கப்பட்டன. 
 
தூண்களில் சித்தரிக்கப்பட்ட மிகவும் பொதுவான விலங்கு குதிரை ஆகும். 
 
பெரிய மண்டபங்களில் நூறு தூண்களும் சில பெரிய கோவில்களில் ஆயிரம் தூண்களும் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. 
 
கல்யாண மண்டபத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசுவாமி, ஏகம்பரநாத கோவில்களும், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவிலும் உள்ள மண்டபங்கள் ஆகும்.

விஜயநகர மன்னர்களின் காலத்தில் ஹம்பி, திருங்கேரி, திருப்பதி, காளஹஸ்தி, நந்தி, கோலார், ஸ்ரீசைலம் ஆகிய இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டன. 
 
கோவில் கட்டடக்கலையில் புதிய கூறுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதவிர, பிரதான சன்னதிக்கு வடமேற்கில் அம்மன் ஆலயம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோவில் தேவிக்காக கட்டப்பட்டது. இது பிற்கால சோழர் காலத்தில் தொடங்கிய இந்த முறையானது இப்போது நடைமுறையாகிவிட்டது

கிருஷ்ணதேவராயர் ஒரு சிறந்த கட்டடக்கலை நிபுணர் ஆவார். அவர் தனது தாயார் நாகம்பாவின் நினைவாக நாகலாபுரம் (விஜயநகருக்கு அருகில்) என்ற நகரை நிறுவினார். 
 
மேலும் பேரரசின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள், கோபுரங்கள் மற்றும் கோவில்களைக் கட்டினார். இவற்றில் மிகவும் பிரபலமானது விட்டலசாமி கோவில் மற்றும் விருபாக் ஷா கோவில்கள் ஆகும். 
 
கிருஷ்ணதேவராயரின் ஆட்சியில் கட்டப்பட்ட புகழ்பெற்ற ஹசாரா ராமா கோவிலை " இந்து கட்டடக்கலையில் முழு நிறைவு வாய்ந்த ஓர் எடுத்துக்காட்டாகும் " என்று லாங்ஹர்ஸ்ட் குறிப்பிடுகிறார். 
 
விட்டலசாமி கோவில் விஜயநகர பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஃபெர்குஸன் என்பவர், இது "கட்டடக்கலைப்பாணி மிகுந்த பேரழகுடன் முன்னேறியிருந்ததன் முழு எல்லையைக் காட்டுகிறது" என்கிறார். விட்டலசாமி கோவிலில் உள்ள சப்தஸ்வர இசை தூண்கள் மற்றும் கல் தேர் ஆகியவை கட்டடக்கலையின் சில அதிசயங்கள் ஆகும்.

விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி

அரவீடு வம்சத்தின் ஆட்சியாளர்கள் திறமையற்றவர்களாய் இருந்ததால் அதனைப் பயன்படுத்திக்கொண்ட மாகாண ஆளுநர்கள் தங்களது சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டனர். 
 
பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா ஆட்சியாளர்கள் விஜயநகரின் சில பகுதிகளை இணைத்துக்கொண்டனர். தென் பகுதி நாயக்கர்கள் சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டனர். இதனால் கி.பி 1614 இல் விஜயநகரப்பேரரசு வீழ்ச்சியடைந்தது. 
 
விஜயநகர பேரரசு  பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.உடனுக்குடன் தேர்வினை எழுதி சுய பரிசோதனை செய்து பார்க்க Touch Here

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template