Ads Area

TNPSC - துருக்கியர்களின் படையெடுப்பு - Turkey invasion in india

வணக்கம் நண்பர்களே! இதற்கு முந்தைய பகுதியில் அரேபியப் படையெடுப்பு பற்றி பார்த்தோம் பார்க்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்..


 
 
 

துருக்கிய படையெடுப்பு

 

கி.பி 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில், பாக்தாத் கலிபாக்களிடம் துருக்கியர்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். 

 

துருக்கியர் அரேபியர்களை விட தீவிரமான ஆக்கிரமிப்புக் கொள்கை உடையவர்கள். 

 

எனவே அரேபியர்கள் ஆதிக்கத்திலிருந்த சிந்து, முல்தான் பகுதிகளையும் கடந்து இந்தியாவில் துருக்கியர்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

 

கஜினி முகமது

 

மத்திய ஆசியாவிலிருந்த அரபியப் பேரரசு உடைந்து, அதன் பல மாகாணங்கள், தங்களை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன. 

 

இவற்றில் ஒன்று தான் சாமானித் (Sammanid) பேரரசு

 

பிறகு இதுவும் உடைந்து, பல சுதந்திர அரசுகள் தோன்றின.  

 

சாமானித் பேரரசில் குரசன் என்ற பகுதியின் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அல்படிஜின், கி.பி 963 இல் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்த கஜினி நகரை கைப்பற்றி, ஒரு சுதந்திர அரசை நிறுவினார். 

 

பிறகு விரைவிலேயே அல்ப்டிஜின் இறந்துபோனார். அதற்குப்பிறகு மகமூத்தின் தந்தையான சபுக்தா ஜின்னுக்கு முடிசூட்டப்படுகிறது.

 

இந்தியாவில் இஸ்லாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை  தொடங்கி வைத்த சபுக்தா ஜின் கி.பி 997 இல் இறந்துவிடுகிறார்.

 

சபுக்தா ஜின்  இறந்தபோது கஜினி மாமுது குரசனில் இருந்தார். இதனால்,  சபுக் தஜினின் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். 

 

பிறகு, தனது சகோதரன் இஸ்மாயிலை தோற்கடித்து இருபத்தேழு வயது கஜினி மாமுது ஆட்சியில் அமர்ந்தார். 

 

கஜினி மாமுது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை வாழ்த்தும் பொருட்டு ஒரு பதவி ஏற்பு அங்கியை அளித்தும் யாமினி - உத் -  தவுலா (பேரரசின் வலதுகை) என்ற பட்டத்தை வழங்கியும் கலிபா அவரை அங்கீகரித்தார்.

 

தொடர்ந்து,  கி.பி 1001ல் காந்தாரத்தை ஆண்ட ஷாஜி மரபின் இந்து அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்த கஜினி மாமூத்.

 

கி.பி.1005, 1006 ஆம் ஆண்டுகளில் ஜெயபாலரின் நண்பரான முல்தான் அரசர் பதே தாவூத்தை வீழ்த்தினார். சியா பிரிவு இசுலாமியர்களையும் படுகொலை செய்தார் மற்றும் நாகர்கோட்டை அரசர் ஆனந்த பாலர் ஆகியோரையும் வீழ்த்தினார். பிறகு சந்தேலர்களை தோற்கடித்தார்.. 

 

சர் ஹென்றி எலியட் அவர்கள் எழுதிய நூலில் 32 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கஜினி முகமது இந்தியாவின் மீது  மேற்கொண்ட 17 படையெடுப்புகள் பற்றி கூறுகிறார். வட இந்தியாவின் செல்வ செழிப்புமிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த முகமது, ஒவ்வொரு முறையும் எண்ணற்ற செல்வங்களை கொண்டு சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.

 

1008. பெசாவரில் நடந்த போரில், கூட்டாக போரிட வந்த உச்சையினி, குவாலியர், கன்னோசி, தில்லி, அஜ்மீர் மற்றும் கலிங்க நாட்டு இந்து அரசர்களை கசினி முகமது வென்று ’காங்கிரா’ (இமாசலப் பிரதேசம்) பகுதியில் பெருஞ்செல்வங்களை கொள்ளை அடித்தார்.

 

 1010. கோரி நாட்டின் அரசர் முகமது பின் சூரி மீது படையெடுத்து வென்றார்.


1010. முல்தான் பகுதியில் கலவரத்திற்கு காரணமான அப்துல் பதே தாவூது என்பவரை போரில் வென்று, சிறைபிடித்து கசினியில் மரணம் வரை சிறையில் அடைத்தார்.


1011 இல் பஞ்சாப்பிலுள்ள நகார்கோட் நகரைக் கைப்பற்றினார்.


1012-1013. டெல்லிக்கு அருகேயுள்ள தானேசுவரத்தை போரில் வென்று அந்நாட்டின் செல்வத்தை சூறையாடினார்.


1013. புல்நாத்து (Bulnat) போரில், இந்து மன்னர் திருலோசன பாலனை வென்றார்.


1014. குசராத்து மீது படையெடுத்து தாக்குதல் நடத்தினார்.


1015. லாகூரை தாக்கி அழித்த பின், கடுமையான வானிலை காரணமாக காஷ்மீரை கைப்பற்ற முடியாது திரும்பி சென்றார்.


1017. மீண்டும் காஷ்மீர் மீது படையெடுப்பு. அடுத்து ஆற்றாங்கரை அரசுகளான கன்னோசி, மீரட் மற்றும் மதுரா ஆகிய நாடுகளின் மீது படையெடுத்து வென்று, அளப்பரிய கப்பத் தொகையுடன், குதிரைகள் மற்றும் படைவீரர்களையும் கவர்ந்து தன் படைபலத்தை பெருக்கிக் கொண்டார்.


1018. மதுராவில் இருந்த கிருட்டிணன் கோயிலை இடித்துத் தள்ளினார். கோயிலிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்தார்.


1021. லாகூரை வென்று, மாலிக் அயாசுகான் என்பவரை அந்நாட்டு அரசனாக்கினார்.


1023. பஞ்சாப் நாட்டை அதிகாரப்பூர்வமாக தன் நாட்டுடன் இணைத்தார்.

அவருடைய அடுத்த படையெடுப்பு குஜராத்தின் மீதானதாகும். கி.பி 1024 இல் மாமுது முல்தானிலிருந்து புறப்பட்டு ராஜபுதனத்தின் குறுக்கே படையெடுத்து வந்த சோலங்கி அரசர் முதலாம் பீமதேவரை தோற்கடித்து அன்கில்வாட் நகரைச் சூறையாடினார்.

 

சோமநாதபுரம் படையெடுப்பு 

 

இந்தியாவில் முகமது கஜினி மேற்கொண்ட படையெடுப்பிலேயே முக்கியமானது கிபி.1025  நடந்த சோமநாதபுர படையெடுப்பாகும்.  

 

இந்த இடம் குஜராத்திலுள்ள் கத்தியவார் தீபகற்பத்தில் உள்ளது. 

 

ராஜா பீமதேவரை கஜினி மிக எளிதாக வெற்றி பெற்று, இரண்டு கோடி தினார் மதிப்புடைய கொள்ளைப் பொருட்கள் கஜினி மாமுது எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. 

 

வரலாற்றறிஞர்  ரோமிலா தாப்பர், 'சோமநாதப்புரப் படையெடுப்பு குறித்த தகவல்கள் 13ஆம் நூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால், இதன் சமகால சமண மதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை ' என்கிறார்.

 

கஜினி முகமதுவைப் பற்றிய மதிப்பீடு: 

 

மாமூத் கல்வியாளர்களைப் பெரிதும் ஆதரித்தார். பிர்தொளசி, அல்பருனி ஆகிய அறிஞர்கள் இவரது அவையில் இடம் பெற்றிருந்தனர். 

 

கணிதவியலாளரும் தத்துவஞானியும் வானியலாளரும் வரலாற்று ஆசிரியருமான அல்-பெருனி, கஜினி மாமுதுவுடன் இந்தியா வந்தார். 

 

பல மொழிகளில் புலமை பெற்ற அவர் சமஸ்கிருதமும் கற்றுக்கொண்டார்; இந்து மத நூல்களையும் கற்றார். யூக்ளிடின் கிரேக்க நூலைக்கூட அவர் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். 

 

ஆரியப்பட்டரின் முக்கிய நூலான ஆரியப்பட்டியம் (புவி, அதன் அச்சில் சுழல்வது இரவு பகலை ஏற்படுத்துகிறது போன்ற செய்திகளை உள்ளடக்கிய நூல்) என்பதை அவர் மேலை நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார். இந்தியாவுக்கும் பிற உலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தார்.

 

கஜினி மரபின் முடிவு

 

கஜினி மாமுது இறந்த பிறகு கஜினி வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை தொடர்பாக முடிவற்ற மோதல்கள்  நிகழ்ந்தன. 

 

இருப்பினும், 42 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த சுல்தான் இப்ராஹிம், 17 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த அவரது மகன் மசூத் போன்ற சில விதிவிலக்குகளும் இருந்தனர். 

 

வடக்கே கோரிகளிடமிருந்தும் மேற்கே துருக்கியரிடமிருந்து கஜினி வம்ச ஆட்சிக்கு நிரந்தர அபாயம் இருந்து வந்தது. இது அரசாட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தியது.  

 

இதனால், கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள்  லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது; இதுவும் கூட முப்பது ஆண்டுகளே நீடித்தது. 

 

1186 இல் கோரி அரசர் மொய்சுதீன் முகமது என்கிற கோரி முகமது, பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரைக் கைப்பற்றினார். 

 

கஜினி வம்சத்தின் கடைசி அரசர் குரவ் ஷா, 1192 இல் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.

 

முகமது கோரி

 

கோர் பகுதியைச் சேர்ந்த முகமது அல்லது முகமதுகோரி கஜினிக்குக் கப்பம் கட்டிய குறுநிலத் தலைவராக இருந்தவர்.  

 

கஜினி மாமூதின் இறப்பிற்குப் பின்னர் சுதந்திரமானவரானார். 

 

கஜானாவியப் பேரரசின் வீழ்ச்சியைச் சாதகமாக்கிக்கொண்ட முகமது கோரி கஜினியைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தார். 

 

இந்தியாவின் மீது படையெடுத்த முக்கியமான மூன்று இஸ்லாமிய படைடியடுப்பாளர்களில் கோரியும் ஒருவர்.  

 

ஹீரட்டுக்கும், கஜினிக்கும் நடுவே மலைப்பகுதியான கோரி என்ற இடத்திற்கு முகமது மன்னரானார்.  

 

கோரி என்ற இடத்தை ஆட்சி செய்ததால் முகமது கோரி என அழைக்கப்பட்டார்.

 

கோரியின் படையெடுப்புகள்

 

வெற்றிகாண வெண்டுமென்ற நோக்கமும், துணிச்சலும் கொண்ட கோரி கி.பி.1175 இல் இந்தியா மீது படையெடுக்கத் தொடங்கினார்.  

 

முதலில் முல்தான், உச் ஆகிய இடங்களைக் கைப்பற்றி பின்னர் கி.பி 1182 இல் சிந்துப் பள்ளத்தாக்கையும் கைப்பற்றினார்.  

 

பின்னர் கி.பி.1185 இல் பஞ்சாப்பை வென்று, சியால்கோட் என்ற கோட்டையையும் பிடித்தார்.  கி.பி.1186 இல் லாகூரை வென்றார்.

 

முதலாம் தரெய்ன் போர் (கி.பி.) 1191 

 

அஜ்மீர் சௌகான்களின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தாவிலுள்ள பதிண்டா கோட்டையை கி.பி. 1189 இல் முகமது கோரி தாக்கினார்.   

 

கி.பி.1191 இல் இராஜபுத்திர அரசர் பிருதிவிராச சௌகான் ஒரு பெரும் படையுடன் முகமது கோரியை  தரெய்ன் என்னுமிடத்தில் எதிர்த்துப்போர் புரிந்தார்.  

 

முடிவில் கோரி இப்போரில் தோல்வி அடைந்தார். மேலும் முகமது இதில் காயமடைந்தார். 

 

இத்தோல்விக்குப் பழி வாங்கும் பொருட்டு முகமது கோரி தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு பெரும்படையைத் திரட்டினார்.  தன்னுடைய பெரும்படையோடு பெஷாவர், முல்தான் வழியாக லாகூரை வந்தடைந்தார்.

 

தன்னுடைய மேலாதிக்கத்தை அங்கீகரிக்குமாறு ஒரு முஸ்லீமாக மாறும்படியும் அவர் பிருதிவிராஜ் சௌகானுக்குச் செய்தியனுப்பினார்.  அதனை மறுத்த பிருதிவிராஜ் போருக்குத் தயாரானார்.

 

இரண்டாம் தரெய்ன் போர் (கி.பி.1192)

 

முகமது கோரி தனது படை வலிமையைப் பெருக்கிக் கொண்டு இரண்டாவது முறையாகக் கி.பி.1192 இல் பிருதிவிராசனுடன் மோதினார்.  கோரியின் பெரும்படையை பிருத்விராஜன் எதிர்பார்க்கவில்லை.

 

மற்ற இராசபுத்திரப் படைகளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டு பிருதிவிராசன், கோரியுடன் போரிட்டார்.  ஆனால் இந்தக் கூட்டுப்டைகளைக் கோரி எளிதாகத் தோற்கடித்தார்.   

 

பிருதிவிராசன் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

 

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகத் துருக்கிய முஸ்லீம் அரசுகள் இந்தியப் பகுதியில் நுழைய இந்த இரண்டாம் தரெய்ன் போர் வழியமைத்துக் கொடுத்தது. 

 

இராசபுத்திரர் போராட்டங்கள்

 

கி.பி.1193க்கும் 1198 க்கும் இடையே பல இராசபுத்திர அரசுகள் தாங்கள் இழந்த பகுதியை மீட்கப்போராடத் தொடங்கின.  

 

குத்புத்தீன் ஐபெக் இராசபுத்திரர்களை அடக்கி அவர்களின் பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்து முகமது கோரியின் அரசுடன் இணைத்தார்.  முகமது கோரி அரசின் தலைநகரமாகத் தில்லி அமைந்தது.

 

சந்தாவார் போர் (கி.பி. 1194)

 

வட இந்தியாவின், பெரும்பகுதியை உள்ளடக்கிய, கனோஜ்பகுதியை ஆண்ட இராசபுத்திர மன்னர் ஜெயசந்திரனுக்கு எதிராக முகமதுகோரி போரிட முனைந்தார்.  

 

சந்தவார் என்ற இடத்தில் நடைபெற்ற பெரும்போரில், எங்கிருந்தோ பறந்து வந்த அம்பு ஒன்று ஜெயசந்திரனின் கண்ணைத் துளைத்தது.  

 

ஜெயச்சந்திரனும் தோற்கடிக்கப்பட்டு, கோரியால் கொல்லப்பட்டார்.  

 

இந்த சந்தவார் வெற்றியானது முகமது கோரி தனது இந்திய அரசை மேலும் விரிவாக்கிக்கொள்ள வழியமைத்தது.

 

கோரியின் தந்திரம்

 

முகமது கோரி, இராசபுத்திர படையெடுப்பில் தந்திரத்துடன் செயல்பட்டார். 

 

தனது படையை ஐந்து பாகங்களாகப் பிரித்து அதில் நான்கு பிரிவுகளை இராசபுத்திரப்படைகளைச் சூழ்ந்து போரிடச் செய்தார். 

 

ஐந்தாவது பிரிவைக் காப்புப்படையாக நிறுத்தி வைத்தார்.  நாளெல்லாம் தீரமுடன் போரிட்ட இராசபுத்திரர்கள் களைப்படைந்த நேரத்தில் தமது காப்புப்படையை இராசபுத்திரர்களைத் தாக்குவதற்கு அனுப்பினார்.  

 

இந்த ஐந்தாவது படைப்பிரிவான காப்புப்படை வேகமாகச் செயல்பட்டு இராசபுத்திரர்களை வீழ்த்தியது.

 

வங்காளம், பீகார் படையெடுப்பு

 

குத்புதீன் ஐபக்கின் தளபதியான முகமது-பின்-பக்தியார் கில்ஜி என்பார், கி.பி.1202-1203 ஆண்டுகளில் விக்ரமசீலா, நாளந்தா ஆகிய பல்கலைக்கழகங்களை இடித்துத் தள்ளியதோடு வங்காளத்தில் நடியா பகுதியையும், பீகார் பகுதியையும் கைப்பற்றினார்.

 

முகமது கோரியின் இறப்பு

 

மத்திய ஆசியாவில் உள்ள தனது எதிரிகளை அடக்குவதற்காக முகமது கோரி, கஜினிக்குத் திரும்பினார்.  ஒருநாள் மாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, ஷியா பிரிவைச்சேர்ந்த புரட்சியாளர்களும், கோகர்களும் சேர்ந்து 1206 ஆம் ஆ;ணடு மார்ச் 25-இல் அவரைக் கொலை செய்தனர்.

 

இந்தியாவிலிருந்த அவருடைய திறமை வாய்ந்த தளபதி குத்புதீன் ஐபக் முகமது கோரிக்குச் சொந்தமாயிருந்த இந்தியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டுவந்த பின்னர் தன்னை "டெல்லியின் முதல் சுல்தான்" எனப் பிரகடனப்படுத்திக்கொண்டார். 


இந்திய மண்ணில் துருக்கியப் பேரரசை உறுதியாக நிறுவியவர் முகமது கோரி எனலாம்.

 

Free Test Link


துருக்கியர்களின்  படையெடுப்பு  பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE


Bottom Post Ad

Ads Area