எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » பருவநிலை - பருவக்காற்று - புவியியல் - TNPSC

பருவநிலை - பருவக்காற்று - புவியியல் - TNPSC




















இயற்கை சூழலின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று பருவநிலை.   இது ஒரு இடத்தின் நில அமைப்பு, மண்,  இயற்கைத் தாவரம் மற்றும் வேளாண்மை போன்றவற்றை நிர்ணயிக்கிறது.  நாம் உடுக்கும் உடை, உண்ணும் உணவு,  வசிக்கும் இடம் ஆகியவை காலநிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஆனால் காலநிலை ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறுபட்ட இயற்கை நிலத்தோற்றங்கள் பல்வேறு கால நிலையை உருவாக்குகின்றன.

வட இந்தியாவின் காலநிலை தென்னிந்திய காலநிலையிலிருந்து வெப்பம், மழைப்பொழிவு போன்றவற்றில் மாறுபட்டு காணப்படுகிறது.  சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் கால நிலை என்றும் அழைக்கப்படுகிறது.  இக்காலநிலை அதிக வெப்பமுடைய தாகவோ அல்லது மிகக் குளிர் உடையதாக இருக்காது.

வானிலை 

வானிலை என்பது ஓர் இடத்தின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம், அழுத்தம், காற்று, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றின் அன்றாட நிலையைக் குறிப்பதாகும். 

காலநிலை

காலநிலை என்பது ஓர் இடத்தின் நீண்ட நாளைய உண்மையான சராசரி வானிலையை குறிப்பதாகும்.  அதன் அளவினை கண்டறிய குறைந்தபட்சம் 35 வருடகால பதிவுகள் அவசியம் தேவைப்படுகிறது. 

இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்

அச்சங்கள்
உயரம் 
கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு 
பருவக்காற்று
நிலத்தோற்றம் 
ஜெட் காற்றுகள்

அச்சங்கள் 

இந்தியா 8°4'  வட அட்சத்திற்கும்  37°6' வட அட்சத்திற்கும் இடையே அமைந்துள்ளது. 23°30' வட அச்சமான கடகரேகை நாட்டின் குறுக்கே செல்கிறது.  கடக ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகள் பூமத்திய ரேகைக்கு மிக அருகே உள்ளதால்,  ஆண்டு முழுவதும் அதிகமான வெப்பத்தை பெறுகிறது.   கடக ரேகைக்கு வடக்கில் உள்ள பகுதிகளுக்கு மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது.      

எனவே இப்பகுதிகள் குளிர்காலங்களில் குறைந்த வெப்பத்தை பெறுகிறது. கோடை காலத்தில் இப்பகுதியின் வெப்பம் 40 டிகிரி செல்சியசுக்கு மேல்ஆகும். குளிர்காலத்தில் வெப்பநிலை உறைநிலையை ஒட்டியும் இருக்கும்.

உயரம்

புவி பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு இயல்பு வெப்ப வீழ்ச்சி என்று பெயர். அதாவது புவிப் பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல 165 மீட்டர் உயரத்திற்கு ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைந்து கொண்டே செல்கிறது. 

எனவே உயரமான இடங்கள் சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் குளிர்ந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு உதகை, தென் இந்தியாவின் இதர மலைவாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளி பகுதிகளை விட  மிகவும் குளிராக உள்ளது.

கடலிலிருந்து தூரம் 

இந்தியாவில் கடக ரேகைக்கு வடக்கில் உள்ள இடங்களில் கண்ட காலநிலை நிலவுகின்றது. அதாவது கோடை காலத்தில் அதிக வெப்பமும் குளிர்காலத்தில் அதிக குளிராகவும் உள்ள கால நிலை கண்ட நிலை எனப்படும். இப்பகுதிகள் கடலில் இருந்து வெகு தொலைவில் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.  

கடற்கரையில் அமைந்துள்ள இடங்கள் மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் சூழப்பட்டுள்ளதால் மித வெப்ப காலநிலை காணப்படுகிறது. 

கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு வெப்பம் மற்றும் அழுத்த வேறுபாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் மழைப்பொழிவையும் பாதிக்கிறது.  

இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலில் இருந்து வெகு தொலைவில் இல்லை.  இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல்சார் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர் காலம் குளிரற்று  காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்ப நிலையைக் கொண்டுள்ளது.

கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகள்  வெப்ப நிலையில் பருவகால மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. இங்கு கோடையில் கடும் வெப்பம் மற்றும் குளிர் காலத்தில் கடும் குளிரும் நிலவுகிறது. 

கொச்சி கடற்கரைப் பகுதியில் அமைந்திருப்பதால் இதன் வருடாந்திர சராசரி வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மிகாமல் உள்ளது.  மாறாக கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள புதுடில்லியின் வருடாந்திர சராசரி வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உள்ளது.   

கடற்கரை பகுதியில் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதால் இவை அதிக மழை தரும் திறனை கொண்டுள்ளது.  இதனால் கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவில் மழைப்பொழிவு 119 சென்டி மீட்டராகவும் உள் பகுதிகளில் அமைந்திருக்கும் ராஜஸ்தானின் பிகானிரில் 24 சென்டி மீட்டருக்கு குறைவான மழைப் பொழிவும் பதிவாகிறது.

பருவக்காற்று

இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் மிக முக்கிய காரணிகளில் ஒன்று பருவக்காற்றாகும். இவை பருவங்களுக்கு ஏற்ப மாறி வீசும் காற்றுகளாகும். 

இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றின் தாக்குதலுக்கு உள்ளாகிறது.  இந்தியாவில் சூரியனின் கதிர்கள் ஜூன் மாத மத்தியில் விழுகின்றபொழுதிலும், கோடைகாலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது ஏனெனில் தென்மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கன மழை பொழிகிறது.  இதேபோல் தென் கிழக்கு இந்தியாவின் காலநிலையும்  வடகிழக்குப் பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.

காற்று கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் போது மிதமான வெப்பநிலையும் நிலப்பகுதிகளுக்கு உள்ளேயே வீசும்போது வறண்ட வெப்பநிலையும் காணப்படும்.

மேற்கு காற்றுகள் மத்தியதரைக் கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதியை நோக்கி வீசுகிறது. இக்காற்று பஞ்சாப்,  ஹரியானா மாநிலங்களில் மழையைத் தருகிறது.  வெப்பமண்டல புயல் காற்று வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வீசுகிறது.  இது மிகுந்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் விளைவிக்கின்றன.

ஜெட் காற்று

வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ஜெட்காற்றுகள் எனப்படும். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின்படி, உப அயன மேலைக் காற்றோட்டம்  வட பெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்கு பருவகாற்று உருவாகிறது. 

கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவகாற்று காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவ காற்றின் தொடக்க காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

மலைகளின் அமைவு :

ஒரு இடத்தின் காலநிலையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் உள்ள உயர்ந்த இமயமலைத் தொடர் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவை நோக்கி வீசும் கடும் குளிர் காற்றை தடுக்கிறது.

மழையை கொண்டுவரும் தென்மேற்கு பருவக்காற்றினை இமயமலைத்தொடர் தடுத்து காற்றில் உள்ள ஈரப்பதத்தை வடகிழக்கு மற்றும் சிந்து கங்கைச் சமவெளிக்கும் மழையாக பொழிய வழி வகுக்கிறது.

ஆரவல்லி மலைத்தொடர் தென்மேற்கு பருவகாற்றினைத் தடுப்பதால் இதன் மேற்குபகுதி மிகக் குறைந்த மழை பொழிவை பெற்று பாலைவனமாக உள்ளது. எல்நினோ என்பது ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு ஒருமுறை காணப்படும் ஒரு வானிலை நிகழ்வாகும்.இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியையும் வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.  இந்தியாவின்  தென்மேற்கு பருவ காற்று வீச  ஆரம்பிப்பதில் இது கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.

நிலத்தோற்றம்

இந்தியாவின் நிலத்தோற்றம் காலநிலையின் முக்கியக் கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழை அளவை பெருமளவில் பாதிக்கிறது.  

இமயமலைகள் மத்திய ஆசியாவில் இருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து இந்தியத் துணைக் கண்டத்தை வெப்ப பகுதியாக வைத்திருக்கிறது.  இதனால் குளிர் காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவு பகுதி கன மழையைப் பெறுகிறது. மாறாக மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலை மறைவு பிரதேசம் பகுதி அல்லது காற்று மோதாப் பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக் குறைந்த அளவு மழையை பெறுகின்றன.  இப்பருவத்தில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர்  280 சென்டிமீட்டர் மழை பொழியும், மலை மறைவுப்பகுதியில் அமைந்துள்ள பெங்களூர் 50 சென்டிமீட்டர் மழைப்பொழிவையும் பெறுகிறது.

         இந்தியாவின் காலநிலையிலும் நில தோற்றத்திலும் மிகப்பெரும் வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் இந்திய ஒற்றுமைக்கு மிக முக்கிய காரணியாக விளங்குவது பருவக்காற்று ஆகும். 

மான்சூன் என்ற சொல் மௌசிம் என்ற  அரபுச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் .இதன் பொருள்  பருவ காலம் என்பதாகும். பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்திய பெருங்கடல் கடற்கரை பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கு ஏற்ப மாறி வீசும் காற்றைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. கோடைகாலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வட கிழக்கு நோக்கியும் குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென் மேற்கு நோக்கியும் வீசுகிறது.

       பருவகால காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வாகும்.  வானிலை வல்லுநர்கள் பருவகால தோற்றத்தை பற்றி பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.  அதில் ஒன்றான இயங்கு கோட்பாட்டின்படி சூரியனின் நிலைக்கு ஏற்ப பருவகால இடப்பெயர்வாகும்.

வடகோள உச்ச கோடையில் சூரியனின்  செங்குத்துக்கதிர் கடக ரேகையில் மீது விழுகிறது.  இதனால் அனைத்து வளி அழுத்த மற்றும் காற்று மண்டலங்கள் வடக்கு நோக்கி இடம் பெயர்கின்றன.  

இச்சமயத்தில் இடை அயன குவிமண்டலமும் வடக்கு நோக்கி நகர்வதால் இந்தியாவின் பெரும்பகுதி தென்கிழக்கு வியாபார காற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்றன. இக்காற்று பூமத்திய ரேகையைக் கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விசையின் காரணமாக வட கிழக்கு நோக்கி வீசுகிறது.  இது தென் மேற்கில் இருந்து வீசுவதால் தென்மேற்கு பருவக்காற்று ஆக மாறுகிறது.

குளிர் பருவத்தில் வளி அழுத்த  மற்றும் காற்று மண்டலங்கள் தெற்கு நோக்கி நகர்வதன் மூலமும் வடகிழக்கு பருவக்காற்று உருவாகிறது.  இவ்வாறு பருவங்களுக்கு ஏற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள்காற்றுகளை பருவக்காற்று என்கிறோம்.
   
பருவக்காற்று ஆறு மாதங்கள் தென்மேற்கு திசையிலிருந்தும், அடுத்த ஆறு மாதங்கள் வடகிழக்கு திசையிலிருந்தும் வீசுகிறது.  கோடை காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையே தங்களது திசையை முழுவதுமாக மாற்றி கொண்டு வீசும் காற்றுக்கு தான் பருவகாற்று என்று பெயர்.  இப்பருவக்காற்றினால்  இந்தியாவில் வெப்ப மண்டல பருவகாற்று காலநிலை நிலவுகிறது.

வெப்பமண்டல பருவகாற்று காலநிலையின் முக்கிய அம்சங்கள் 

பருவ காற்றினை அது  வீசும் திசையை அடிப்படையாகக் கொண்டு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று என இரு வகைகளாக பிரிக்கலாம்.

இவை நிலம் மற்றும் கடல் வெப்பம் அடைவதால் ஏற்படும் மாறுபாட்டால் உருவாகின்றன. பருவ காலங்களை மாற்றி மாற்றி அமைப்பதே பருவக்காற்றுகளின் முக்கிய அம்சமாகும். இதுவே இந்தியாவின் காலநிலையைத்  தீர்மானிக்கிறது.

பருவநிலை - பருவக்காற்று பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template